நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 2-வது படம் வலிமை. இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். குடும்ப செண்டிமெண்ட் நிறைந்த அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக வலிமை தயாராகி உள்ளது.
இதில் அஜித் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் வில்லன் கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார்.
யுவன் மற்றும் ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. அதன்படி வருகிற ஜனவரி 13-ந் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் கொரோனா பாதிப்பு அதிகரித்ததன் காரணமாக தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சமயத்தில் படத்தை வெளியிட்டால் வசூல் பாதிக்கும் என்பதாலும், மேலும் தொற்று பரவும் அபாயம் இருப்பதாலும் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்படுவதாக வலிமை படக்குழு அறிவித்தது. நிலைமை சீரானது திரையரங்குகளில் வெளியிடுவோம் எனவும் உறுதி அளித்திருந்தனர்.
இந்நிலையில், அடுத்த மாதத்திற்குள் நிலைமை சீராகும் என கூறப்படுவதால், வலிமை படக்குழு ரிலீஸ் பணிகளை துவக்கி உள்ளதாம். இதற்காக 2 தேதிகளையும் லாக் செய்து வைத்துள்ளார்களாம். அதன்படி பிப்ரவரி 25 அல்லது மார்ச் 4 ஆகிய இரு தேதிகளில் ஒருநாள் படம் ரிலீசாக வாய்ப்புள்ளதாம். இது ஒருபுறம் இருந்தாலும், அடுத்த மாதம் அரசு அறிவிக்கும் தளர்வுகளை பொருத்துதான் இறுதி முடிவு இருக்கும் என கூறப்படுகிறது.