சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களை இயக்கிய எச்.வினோத், அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக உயர்ந்தார். பிங்க் படத்தின் ரீமேக்காக உருவாகி இருந்த இப்படத்தை போனி கபூர் தயாரித்திருந்தார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து அதே கூட்டணியில் தற்போது வலிமை படம் உருவாகி உள்ளது. அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி இருக்கும் வலிமை திரைப்படம், பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீசாக இருந்தது. தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே, அஜித்தின் 61-வது படத்தையும் எச்.வினோத் தான் இயக்க உள்ளதாகவும், போனி கபூர் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் இதற்கு முன் உருவான இரண்டு படங்களிலும் வித்யா பாலன், ஹூமா குரேஷி என பாலிவுட் நடிகைகளை தான் ஹீரோயினாக நடிக்க வைத்திருந்தனர். தல 61 படத்துக்கும் அதே பார்முலாவை பின்பற்ற உள்ளனர்.
அதன்படி இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை தபு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் இருவரும் ஏற்கனவே கடந்த 2000-ம் ஆண்டு ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியான ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர்.
தற்போது 22 ஆண்டுகளுக்கு பின் இந்த ஜோடி மீண்டும் இணைய உள்ளது. அஜித் தென்னிந்திய ஹீரோயினுடன் ஜோடி சேர்வார் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த அப்டேட் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ‘என்ன தல இதெல்லாம்’ என ஷாக் ரியாக்ஷனுடன் அவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.