அதிமுக கொடி, சின்னத்தை வடிவமைத்துக் கொடுத்த பாண்டு மரணம்... ஓபிஎஸ் - இபிஎஸ் உருக்கம்...!

இவருக்கு முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி மற்றும், முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர், மிகவும் உருக்கமாக தங்களுடைய சமூக வலைதளப்பாக்கத்தில், இரங்கல் தெரிவித்துள்ளனர். 
 

கொரோனா முதல் அலையைப் போலவே 2வது அலையிலும் பல திரைப்பிரபலங்களை பறிகொடுத்து வருகிறது கோலிவுட். கொரோனா தொற்று காரணமாக தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா இருவரும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த சூழலில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்று பாண்டு (74) காலமானார். அவரது மனைவி தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாது, குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி வந்த பாண்டுவின் திடீர் மரணம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நடிப்பை தாண்டி, கேப்பிடல் லெட்டர்ஸ் எனும் நிறுவனத்தை நடத்தி வந்த பாண்டு, பல்வேறு திரையுலக பிரபலங்களின் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர் பலகைகளை வடிவமைத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் கொடியை வடிவமைத்து கொடுத்தது இவர் தான்.
இவருக்கு முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி மற்றும், முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர், மிகவும் உருக்கமாக தங்களுடைய சமூக வலைதளப்பாக்கத்தில், இரங்கல் தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்... "திரு.பாண்டு அவர்களை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். அஇஅதிமுகவின் வெற்றி கொடியை வடிவமைத்து, இரட்டை இலை சின்னத்தை வரைந்த பெருமைக்குரியவருமான திரு.பாண்டு அவர்கள் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்." என பதிவிட்டுள்ளார்.
ஓ.பன்னீர் செல்வம் பதிவிட்டுள்ளதாவது... "கழகத்தின் கொடி மற்றும் சின்னத்தை வடிவமைத்துக் கொடுத்தவரும் புரட்சித்தலைவரின்பால் பேரன்பு கொண்டவருமான நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகர், சிறந்த ஓவியர் பாண்டு அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
பாண்டு அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் திரைத்துறையினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வரும் இச்சூழலில் பொதுமக்கள் நோய்த்தொற்றின் தீவிரத்தை உணர்ந்து அவசிய தேவைகள் தவிர வெளியே செல்வதை தவிர்த்து அரசு கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடித்து மிகுந்த கவனத்துடனும் பாதுகாப்புடன் இருக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Latest Videos

click me!