கொரோனா முதல் அலையைப் போலவே 2வது அலையிலும் மகத்தான பல திரைப்பிரபலங்களை பறிகொடுத்து வருகிறது கோலிவுட். கொரோனா தொற்று காரணமாக தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா இருவரும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த சூழலில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்று பாண்டு (74) காலமானார். அவரது மனைவி தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாது, குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி வந்த பாண்டுவின் திடீர் மரணம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் பாண்டுவின் இறுதிச்சடங்கு குறித்து அவருடைய மகன் பின்டு வெளியிட்டுள்ள செய்தி திரையுலகினரையும், ரசிகர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் பாண்டு கொரோனா தொற்றால் உயிரிழந்ததால் அவருடைய உடலை வீட்டிற்கு எடுத்துச் சென்று இறுதி அஞ்சலிக்காக வைக்கவோ, இறுதிச் சடங்குகளை செய்யவோ அனுமதி கிடையாது. எனவே மருத்துவமனையில் இருந்து பாண்டுவின் உடலை நேரடியாக பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு எடுத்துச் செல்ல உள்ளனர்.
பெசன்ட் நகர் மின் மயானத்திலேயே அவருடைய உடலுக்கான இறுதிச்சடங்குகள் அனைத்தும் செய்யப்பட்டும் என்றும் அவருடைய மகன் பின்டு தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 30ம் தேதி கோவிட் தொற்றால் மரணமடைந்த கே.வி. ஆனந்த் உடல் கூட 5 நிமிடமாவது அவருடைய வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டது. அதனை தூரத்தில் நின்று பார்த்து மனைவி, மகள்கள் கதறி அழுதனர். ஆனால் பாண்டுவின் உடலோ நேரடியாக மின் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது என்ற செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.