1990-களில் இருந்து சினிமாவில் நடித்து வருபவர் ஆஷிஷ் வித்யார்த்தி. இந்தி நடிகரான இவர் கடந்த 2001-ம் ஆண்டு தரணி இயக்கத்தில் வெளியான தில் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். இந்தி நடிகராக இருந்தாலும் இவரை மிகவும் பிரபலமாக்கியது தமிழ் படங்கள் தான். தில் படத்திற்கு பின்னர் விஜய், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்து டெரர் வில்லன் என பெயரெடுத்தார் ஆஷிஷ் வித்யார்த்தி.
நடிகர் ஆஷிஷ் வித்யார்த்திக்கு தமிழில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் என்றால் அது, விஜய்யின் கில்லி திரைப்படம் தான். தரணி இயக்கத்தில் கடந்த 2004-ம் ஆண்டு ரிலீஸ் ஆன கில்லி படத்தில் நடிகர் விஜய்க்கு தந்தையாக நடித்திருப்பார் ஆஷிஷ் வித்யார்த்தி. ஸ்டிரிக்ட் ஆன தந்தையாக நடித்திருந்தாலும், அதில் காமெடியிலும் கலக்கி இருப்பார் ஆஷிஷ் வித்யார்த்தி. இப்படத்திற்கு பின்னர் ஆஷிஷ் வித்யார்த்திக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.
இந்த நிலையில், நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி நேற்று திடீரென இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவரது முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. ராஜோஷி என்பவரை திருமணம் செய்துகொண்ட ஆஷிஷ் வித்யார்த்தி, அவருடன் 23 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தார். இந்த ஜோடிக்கு அர்ஷ் என்கிற மகனும் உள்ளார். தற்போது அவருக்கு 23 வயது ஆகிறது.
இந்த நிலையில் தான் ஆஷிஷ் வித்யார்த்தி, அசாமை சேர்ந்த ரூபாலி பருவா என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார். ரூபாலி பருவா கொல்கத்தாவின் துணிக்கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். ஆஷிஷ் வித்யார்த்தியை ரூபாலி முதன்முதலில் சந்தித்தது ஒரு பேஷன் ஷூட்டில் தானாம். அப்போது ஒருவருக்கொருவர் நம்பர் மாற்றிக்கொண்டு பேச ஆரம்பித்துள்ளனர். பின்னர் இருவரும் நெருக்கமாக பழகி வந்ததோடு டேட்டிங்கும் செய்து வந்துள்ளனர்.