நடிகர் அஜித்குமார் நடிப்பில் 2015ம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் வேதாளம். வீரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிறுத்தை சிவா - அஜித் கூட்டணி மீண்டும் ஒன்று சேர்ந்தது. ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன், சூரி, கோவை சரளா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
தல அஜித் , காசுக்காக எதையும் செய்யும் ரவுடி, தங்கைக்காக உயிரையும் கொடுக்கும் அண்ணனாகவும் இரண்டு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். ரசிகர்கள் தாறுமாறாக கொண்டாடிய இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் கெத்து காட்டியது.
மாபெரும் வரவேற்பை பெற்ற வேதாளம் திரைப்படம் முதல் நாளிலேயே ரூ.15.5 கோடி வசூல் செய்யததை யாரும் மறந்திருக்க முடியாது. இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது.
மெகா ஸ்டார் சிரஞ்சீவி இந்த படத்தில் நடிக்க உள்ளார். ஏற்கனவே சிரஞ்சீவி நடித்த பில்லா படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்கிய மெஹர் ரமேஷ் தான் இந்த படத்தையும் இயக்க உள்ளாராம்.
வேதாளம் படத்தில் அஜித்தை அடுத்து மிக முக்கியமான கதாபாத்திரம் என்றால், அது லட்சுமி மேனன் கதாபாத்திரம் தான். தெலுங்கில் இந்த கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
வேதாளம் ரீமேக்கில் சிரஞ்சீவிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் இப்படியொரு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.