தமிழில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான பொறியாளன் படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஆனந்தி. இப்படம் அவருக்கு பெரிய அளவில் பெற்றுத்தராவிட்டாலும், இதையடுத்து பிரபுசாலமன் இயக்கத்தில் அவர் நடித்த கயல் திரைப்படம், அவருக்கு ஒரு அடையாளமாக மாறியது. அப்படத்துக்கு பின்னர் கயல் ஆனந்தி என அழைக்கும் அளவுக்கு பேமஸ் ஆகிவிட்டார் ஆனந்தி.
கயல் படத்தின் வெற்றிக்கு பின் வெற்றிமாறனின் விசாரணை, மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள், ஜிவி பிரகாஷ் உடன் திரிஷா இல்லேனா நயன்தாரா, தினேஷ் ஜோடியாக இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு போன்ற வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து மக்கள் மனதில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தார் கயல் ஆனந்தி.
இதையும் படியுங்கள்... அஜித்தின் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு எப்போது? வெளியானது லேட்டஸ்ட் அப்டேட்
நடிகை கயல் ஆனந்தி, சாக்ரடீஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 2021ம் ஆண்டு இந்த ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த ஓராண்டில் நடிகை கயல் ஆனந்திக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கிய நடிகை கயல் ஆனந்தி, தற்போது இராவண கோட்டம் என்கிற திரைப்படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக நடித்து உள்ளார். இப்படம் வருகிற மே 12-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை கயல் ஆனந்தி தனது மகன் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார். அதன்படி அவர் தனது மகனுக்கு சாதியில்லா சான்றிதழை வாங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார். தான் படித்த புத்தகங்களும், தன் நண்பர்களுடன் ஆன சில உரையாடல்களும் தான் இந்த மாற்றத்திற்கு காரணம் என ஆனந்தி தெரிவித்துள்ளார். பரியேறும் பெருமாள் படத்தில் சாதிக்கு எதிரானவராக நடித்திருந்த கயல் ஆனந்தி நிஜ வாழ்க்கையிலும் சாதிக்கு எதிரான நிலைப்பாடடை எடுத்துள்ளதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இதையும் படியுங்கள்... சர்ச்சைக்குரிய ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் தமிழகத்தில் இனி திரையிடப்படாது என அறிவிப்பு - காரணம் என்ன?