போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள படம் வலிமை. எச்.வினோத் இயக்கி உள்ள இப்படத்தில் நடிகர் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். இப்படத்தில் வில்லன் கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா (Karthikeya) நடித்துள்ளார். யுவன் மற்றும் ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
2 ஆண்டு காத்திருப்புக்கு பின் இப்படம் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் மிகவும் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர். கடந்த 2019-ம் ஆண்டே தொடங்கப்பட்ட இப்படம் இரண்டு ஆண்டுகள் கடின உழைப்புக்கு பின் நேற்று உலகமெங்கும் ரிலீசாகியது. இது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளில் வெளியாகி உள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் வரவு குறைவானதால் கடந்த சில மாதங்களாக வெறிச்சோடி காணப்பட்ட திரையரங்குகளுக்கு புத்துயிர் கொடுக்கும் விதமாக வலிமை படத்தின் ரிலீஸ் அமைந்துள்ளதாக தியேட்டர் உரிமையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
வலிமை படத்தின் முதல் காட்சியை ரசிகர்களோடு அமர்ந்து வலிமை படக்குழுவினர் நேற்று கண்டுகளித்தனர். சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் தயாரிப்பாளர் போனி கபூர், நடிகை ஹூமா குரேஷி, வில்லன் நடிகர் கார்த்திகேயா ஆகியோர் ரசிகர்களோடு காலை 4 மணிக்கே திரையரங்குக்கு வந்து படத்தை பார்த்தனர்.