
1990-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கோலோச்சியவர், உதவி இயக்குனர் மீது காதல் கொண்டு, பின்னர் அவர் இயக்குனரானதும் அவரையே திருமணமும் செய்துகொண்டார். அதுவும் குடும்பத்தினர் எதிர்ப்பை எல்லாம் மீறி வீட்டின் சுவர் ஏறி குதித்து ஓடிப்போய் கல்யாணம் செய்த அந்த நடிகை இன்று சின்னத்திரை சீரியல்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த நடிகையின் குழந்தைப்பருவ புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த நடிகை வேறுயாருமில்லை... நடிகை தேவையானி தான். இவர் கடந்த 1974-ம் ஆண்டு ஜூன் மாதம் 22ந் தேதி மும்பையில் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு கன்னடர், தாய் மலையாளி. இவருக்கு இரண்டு சகோதரர்கள் உண்டு. அதில் ஒருவர் தான் நகுல். தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார். மற்றொருவர் பெயர் மயூர். இவரும் சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.
நடிகை தேவையானி கோயல் என்கிற இந்தி படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் சில கரணங்களால் அப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. இதனால் இவரின் முதல் படமாக கடந்த 1993-ம் ஆண்டு வெளிவந்த ஷாட் போன்சோமி என்கிற பெங்காலி படம் அமைந்தது. இதையடுத்து மராத்தி மற்றும் மலையாள படங்களில் நடித்த தேவையானி கடந்த 1995-ம் ஆண்டு தமிழில் எண்ட்ரி கொடுத்தார்.
கோலிவுட்டில் அவர் முதன்முதலில் நடித்த படம் தொட்டா சினுங்கி. ஆரம்ப காலகட்டங்களில் கிளாமர் வேடங்களில் நடித்து வந்த தேவையானிக்கு, அஜித்தின் காதல் கோட்டை திரைப்படம் நல்ல பெயரையும் புகழையும் பெற்றுக் கொடுத்ததோடு, அவரை ஒரு ஹோம்லி நடிகையாக மக்கள் மனதில் பதிய வைத்தது.
காதல் கோட்டை வெற்றிக்கு பின்னர் தேவையானி தொட்டதெல்லாம் ஹிட்டாக அமைந்தது. குறிப்பாக சரத்குமார் ஜோடியாக அவர் நடித்த நாட்டாமை திரைப்படம் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு மாஸ்டர் பீஸ் படமாக உள்ளது. இதுதவிர விஜய்க்கு ஜோடியாக நினைத்தேன் வந்தாய், அஜித்துடன் நீ வருவாய் என, விஜய்யுடன் பிரெண்ட்ஸ், மம்முட்டி ஜோடியாக ஆனந்தம், பார்த்திபனின் அழகி என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து டாப் ஹீரோயினாக உயர்ந்தார்.
குறிப்பாக 1995-ல் இருந்து 2000-ம் ஆண்டு வரை தேவையானிக்கு ஒரு பொற்காலமாகவே அமைந்தது. ஏனெனில் அந்த ஐந்து ஆண்டு காலகட்டத்திலேயே அவர் 50 படங்களில் நடித்துவிட்டார். இப்படி உச்சத்தில் இருந்த நடிகை தேவையானி திருமணத்துக்கு பின்னர் சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.
இதையும் படியுங்கள்... சினிமால ஒரே பாட்டுல கலெக்டரான தேவயானியின் சொத்து மதிப்பு இத்தன கோடியா? பண்ண வீடு வேற!
நடிகை தேவையானிக்கு கடந்த 2001-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவர் இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தவர் ராஜகுமாரன், நாட்டாமை படத்தில் அவர் உதவி இயக்குனராக பணியாற்றியபோது அப்படத்தில் நாயகியாக நடித்த தேவையானிக்கு ராஜகுமாரன் மீது காதல் ஏற்பட்டது.
பின்னர் ராஜகுமாரன் இயக்கிய விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தில் ஹீரோயினாக தேவையானி நடித்தபோது இருவருக்கும் இடையேயான நெருக்கம் அதிகமானது. அப்படம் முடித்த கையோடு, ராஜகுமாரனை கரம்பிடிக்க முடிவெடுத்த தேவையானி, குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி வீட்டின் சுவர் ஏறி குதித்து திருத்தணி முருகன் கோவிலில் வைத்து ராஜகுமாரனை திருமணம் செய்துகொண்டார்.
அப்போது தேவையானி குடும்பத்தார் அவரை அடிக்க ஆள் அனுப்பிய சம்பவமெல்லாம் அரங்கேறியதாம். இப்படி சினிமாவை மிஞ்சும் அளவுக்கு சேசிங் சம்பவங்களுடன் நடைபெற்றது தேவையானி திருமணம். திருமணத்துக்கு பின்னர் சின்னத்திரை சீரியலில் நடித்தார் தேவையானி. அந்த வகையில் சன் டிவியில் அவர் நடித்த கோலங்கள் சீரியல் சுமார் ஆறு ஆண்டுகள் ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றிபெற்றது.
நடிகை தேவையானிக்கு இனியா, பிரியங்கா என இரண்டு மகள்களும் உள்ளனர். இவருக்கு சொந்தமாக அந்தியூரில் ஒரு பண்ணை வீடும் உள்ளது. அங்கு கணவருடன் சேர்ந்து விவசாயமும் செய்து வருகிறார் தேவையானி. இவரின் குழந்தைப்பருவ புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
இதையும் படியுங்கள்... தேவயானிக்காக கெட்டு போன உணவை சாப்பிட்ட சரத்குமார்? பிரபலம் கூறிய தகவல்!