மாரடைப்பு காரணமாக நேற்று சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக், இன்று அதிகாலை 4.35 மணிக்கு காலமானார்.
சென்னை விருகம்பாக்கத்தில் வைக்கப்பட்ட அவருடைய உடலுக்கு திரையுலகினர், அரசியல் கட்சி பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
அதன் பின்னர் மாலை 4 மணிக்கு மேல் நடிகர் விவேக் உடல் அவரது இல்லத்தில் இருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் விருகம்பாக்கம் மேட்டுக்குப்பம் பகுதியில் உள்ள மின் மயானம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டது. இதில் ஏராளமான திரையுலகினர், பொதுமக்கள் ஆகியோர் கண்ணீருடன் பங்கேற்றனர்.
மக்களை சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் வைத்த சின்னக் கலைவாணர், நம் எல்லாரோரையும் கண்ணீர் மிதக்கவிட்டு மின் மயானம் நோக்கி புறப்பட்டார். செல் நோண்டும் நேரத்தில் மண் நோண்டி மரம் வையுங்கள் என அடிக்கடி கூறிவந்தவர், இன்று வாய் மூடி கிடக்கிறார்.
மேட்டுக்குப்பம் மையானத்தில் வைத்து நடிகர் விவேக் உடலுக்கு தமிழக அரசு சார்பில் காவல்துறையினர் 7குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர்.
நடிகர் விவேக்கின் சமூக சேவை மற்றும் கலைக்கு மரியாதை செய்யும் விதமாக அவருடைய உடலுக்கு காவல்துறையினர் மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் காவல்துறை சார்பில் விவேக் உடலுக்கு 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது
அதன் பின்னர் நடிகர் விவேக் உடல் மேட்டுக்குப்பம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. லட்சக்கணக்கான ரசிகர்களை கண்ணீர் கடலில் மிதக்க விட்டு மீளா தேசம் நோக்கி பறந்தது சிரிப்பு. மண் பயனுற வாழ்ந்தவர் இன்று காற்றோடு காற்றாக கரைந்துவிட்டார்.
மேட்டுக்குப்பம் மின் மயானத்திவைத்து நடிகர் விவேக் உடலுக்கு அவருடைய மனைவி, உறவினர்கள் உள்ளிட்டகுடும்பத்தினர் இறுதிச்சடங்கு செய்தனர். அதன் பின்னர் நடிகர் விவேக் உடல் நல்ல முறையில் எரியூட்டப்பட்டது.