தமிழ் திரையுலகில் காமெடியனாக கோலோச்சிய நடிகர்கள் என்றால் அது வெகு சிலர் தான். அந்த பட்டியலில் நடிகர் விவேக்கும் ஒருவர். பாலசந்தரால் திரையுலகில் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர் விவேக், பிறரை புண்படுத்தாமல், சமூக கருத்துடன் கூடிய காமெடி காட்சிகளில் அதிகளவில் நடித்து தனக்கென ஒரு தனி ஸ்டைலையே உருவாக்கினார். கலைவாணருக்கு பின் கருத்துள்ள காமெடிகளை சொல்லி மக்கள் மத்தியில் பிரபலமானதால் விவேக்கை சின்னக் கலைவாணர் என அனைவரும் அழைக்கத் தொடங்கினர்.
சினிமா மட்டுமின்றி சமூக நலப்பணிகளிலும் ஆர்வம் கொண்ட விவேக், மரம் நடுவதை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து அசத்தினார். இப்படி திரையுலகினரால் கொண்டாடப்படும் கலைஞனாக இருந்து வந்த நடிகர் விவேக் கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் 17-ந் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக மரணமடைந்தார். அவரின் இந்த எதிர்பாரா இழப்பு திரையுலகினரை மீளா துயரத்தில் ஆழ்த்தியது.
இன்று நடிகர் விவேக்கின் 2-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இன்று அவரைப் பற்றிய பல்வேறு நினைவுகளை ரசிகர்களும், பிரபலங்களும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விவேக் இறப்பதற்கு முன் அவரது நீண்ட நாள் ஆசை நிறைவேறியதைப் பற்றி தற்போது பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... விஜய் சேதுபதி விலகிய முத்தையா முரளிதரன் பயோபிக்கில் ஹீரோவாக நடிக்கபோவது யார்? பர்ஸ்ட் லுக் உடன் வந்த அப்டேட்
முன்னணி காமெடியனாக வலம் வந்த நடிகர் விவேக், ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம் போன்ற டாப் நடிகர்களுடன் பணியாற்றினாலும் அவருக்கு கமலுடன் பணியாற்றும் வாய்ப்பு மட்டும் பல ஆண்டுகளாக கிடைக்காமல் இருந்து வந்தது. கமலுடன் நடிக்க வேண்டும் என்பது தான் தனது நீண்ட நாள் ஆசை என்றும் அவரே பல மேடைகளில் ஓப்பனாகவே சொல்லி இருக்கிறார்.
அவரின் அந்த ஆசை இந்தியன் 2 படம் மூலம் நிறைவேறியது. அப்படத்தில் கமலுடன் விவேக் நடித்திருந்தார். ஆனால் அதன் ஷூட்டிங் முடியும் முன்பே அவர் மரணமடைந்துவிட்டதால் அவர் நடித்த காட்சிகள் படத்தில் இடம்பெறுமா என்கிற சந்தேகம் இருந்து வந்த நிலையில், அது நிச்சயம் இடம்பெறும் என்று சமீபத்தில் படக்குழு தரப்பில் உறுதியான தகவல் வெளியானதால் விவேக்கின் அந்த ஆசை நிறைவேறி உள்ளது. ஆனால் அதனை திரையில் பார்த்து ரசிக்க அவர் உயிருடன் இல்லையே என்பது தான் ரசிகர்களின் கவலையாக உள்ளது.
இதையும் படியுங்கள்... Trisha : ‘குந்தவை’னு பெயர் மாத்துனது குத்தமா..! திரிஷாவில் ப்ளூ டிக்-ஐ பறித்த டுவிட்டர்