நடிகர் விஷால் மேடையில் மயங்கி விழுந்த சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விழுப்புரத்தில் நடந்த மிஸ் திருநங்கை அழகிப் போட்டிக்கு விஷால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே நகராட்சி மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விஷால் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அதே நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பொன்முடி அவர்களும் கலந்து கொண்டார்.
24
விஷால் மயங்கியது ஏன்?
விஷால் மயங்கியவுடன், பொன்முடி அவரை தனது காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். சிகிச்சைக்குப் பிறகு விஷால் நலமடைந்ததாகத் தெரிகிறது. ஆனால், விஷால் ஏன் மயங்கினார்? அவரது உடல்நிலை எப்படி உள்ளது? என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்தன. விஷாலின் உடல்நிலை குறித்து அவரது மேலாளர் ஹரி விளக்கம் அளித்தார். விஷாலுக்கு எந்த உடல்நலப் பிரச்சினையும் இல்லை என்றும், மதிய உணவு சாப்பிடாமல் ஜூஸ் மட்டும் குடித்ததால், சோர்வு காரணமாக மயங்கி விழுந்ததாகவும் தெரிவித்தார்.
34
விஷால் உடல்நிலை எப்படி உள்ளது?
மருத்துவர்கள் அளித்த சிகிச்சைக்குப் பிறகு விஷால் நலமாக உள்ளார். இனி உணவு சாப்பிடாமல் இருக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தற்போது விஷால் நலமாக உள்ளார், ரசிகர்கள் கவலைப்படத் தேவையில்லை என்று ஹரி தெரிவித்தார். கடந்த ஜனவரி மாதம் விஷால் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது மேடையில் நடுங்கியபடி பேசியதோடு, உடல் எடை அதிகரித்தும் காணப்பட்டார். வைரஸ் காய்ச்சல்தான் காரணம் என்று தெரியவந்தது. பின்னர் விஷால் குணமடைந்தார்.
நடிகர் விஷால் நடிப்பில் கடைசியாக மதகஜராஜா திரைப்படம் வெளியானது. சுந்தர் சி இயக்கிய இப்படம் கடந்த 12 ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் இருந்த அப்படம் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகி மாபெரும் வெற்றியை பெற்றது. அடுத்ததாக ரவி அரசு இயக்கத்தில் நடித்து வருகிறார் விஷால், இதுதவிர அஜய் ஞானமுத்து, கெளதம் மேனன் ஆகியோர் இயக்கத்திலும் அவர் நடிக்க உள்ளார். அப்படங்களின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.