நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகி உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் லியோ படம் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸின் ஒரு பகுதியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், கவுதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் அனுராக் காஷ்யப் சிறப்பு வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. விஜய் லோகேஷ் கூட்டணியில் வெளியான மாஸ்டர் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. லியோவின் புதிய போஸ்டர்களை படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
தற்போது இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், விஜய் இப்படத்தை தனி ஸ்கீரினில் பார்த்ததாக கூறப்படுகிறது. கிளைமாக்ஸ் உட்பட இதுவரை எடிட் செய்யப்பட்ட 'லியோ' சிறப்புக் காட்சியை விஜய் படக்குழுவினருடன் பார்த்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் லியோ படம் தன்னை வெகுவாக ஈர்த்ததாகவும், முழு திருப்தி, மகிழ்ச்சி அடைந்ததாகவும் விஜய் படக்குழுவினரிடம் கூறினாராம். படத்தின் ஃபைனல் வெர்ஷனை பார்த்துவிட்டு லோகேஷை கட்டுப்பிடித்து பாராட்டியதாகவும், படம் பிளாக்பஸ்டர் ஹிட் என நம்பிக்கையுடன் கூறியதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக, திரைப்பட தயாரிப்பாளர்களும் விஜய்யுடன் படத்தைப் பார்த்ததாகவும், படத்தின் வெளியீட்டில் அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தனர். மேலும் இப்படம் ரசிகர்களை ஏமாற்றாது என தயாரிப்பாளர் லலித் குமார் தெரிவித்துள்ளார். லியோவுக்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் வேளையில், விஜய்யின் அடுத்த படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளார். தற்காலிகமாக 'தளபதி 68' என்று அழைக்கப்படும் இப்படத்தின் ஷூட்டிங் அக்டோபரில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.