தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் தளபதி விஜய், கடந்த 1984 ஆம் ஆண்டு வெளியான 'வெற்றி' என்கிற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். இதைத் தொடர்ந்து, குடும்பம், நான் சிகப்பு மனிதன், வசந்த ராகம், சட்டம் ஒரு விளையாட்டு, போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த விஜய் தற்போது கதாநாயகனாக திரையுலகில் அடியெடுத்து வைத்து 30 வருடங்களை நிறைவு செய்துள்ளார். இதனை அவரது ரசிகர்கள் உச்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.
விஜய்யின் ஆரம்ப கால நடிப்பு மற்றும் அவரது தோற்றம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வெளிவந்த போதிலும், அவை அனைத்தையும் தன்னுடைய பாடமாக ஏற்றுக்கொண்டு, இன்று உலக அளவில் ரசிகர்கள் அனைவராலும், அதிகம் நேசிக்கப்படும் ஒரு நடிகராக உருவெடுத்துள்ளார்.
இதை முன்னிட்டு அவருடைய ரசிகர்கள் பல்வேறு இடங்களில் பல்வேறு உதவிகளை செய்து தங்களுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது சென்னையில் அடையாறு மருத்துவமனையில் பிறந்த 30 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் புத்தாடைகளை, தென் சென்னை மாவட்ட இளைஞரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வழங்கியுள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு, விஜய் ரசிகர்களுக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.