நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்த மாபெரும் நகைச்சுவை கலைஞர் ஆவார். ரஜினி, கமல் தொடங்கி சிம்பு, சூர்யா வரை பல்வேறு முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து படங்களில் இவர் செய்த காமெடி காலம் கடந்து கொண்டாடப்பட்டு வருகின்றன. நகைச்சுவை மன்னனாக வலம் வரும் வடிவேலு இன்று தனது 62-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.
இந்நிலையில், திரைப்படங்களில் அவர் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த காமெடி கதாபாத்திரங்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கைப்புள்ள
சுந்தர் சி - வடிவேலு கூட்டணி சேர்ந்தாலே அந்த படம் ஹிட் தான் என சொல்லும் அளவுக்கு இவர்கள் காம்போவில் வெளிவந்த படங்களில் இடம்பெறும் காமெடி காட்சிகளுக்கென்று தனி மவுசு உண்டு. அந்த வகையில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான வின்னர் படத்தில் இடம்பெற்ற வடிவேலுவின் கதாபாத்திரத்தின் பெயர் தான் கைப்புள்ள. உண்மையில் சொல்லப்போனால் இப்படத்தின் ஹீரோ வடிவேலு தான். பிரசாந்தை விட வடிவேலுவுக்கு தான் அதிக ஸ்கோப் கொடுத்திருப்பார் சுந்தர் சி.
நாய் சேகர்
சுந்தர் சி-யோடு வடிவேலும் நடிக்கும் காமெடி காட்சிகளும் பெரிய அளவில் ரசிக்கப்பட்டன. தலைநகரம் படத்தில் நாய் சேகர் என்ற கேரக்டரில் வந்து சுந்தர் சி-யோடு சேர்ந்து இவர் அடிக்கும் லூட்டி காமெடிக்கு கேரண்டி கொடுத்தன. இப்படத்தில் இவர் பேசும் வசனங்கள் அனைத்தும் இன்றளவும் மீம் கிரியேட்டர்களுக்கு தீனி போட்டு வருகின்றன.
நேசமணி
பாசில் இயக்கிய பிரெண்ட்ஸ் படத்தில் வடிவேலு நடித்த கதாபாத்திரத்தின் பெயர் தான் நேசமணி. இதில் காண்ட்ராக்டராக அவர் நடித்திருப்பார். சமீபத்தில் கூட #JusticeForNesamani என்கிற ஹேஷ்டேக் டுவிட்டரில் உலகளவில் டிரெண்டானது. இதில் விஜய், சூர்யாவோடு இணைந்து இவர் நடித்த காமெடி காட்சிகள் இன்றும் பார்த்த உடன் குபீர் சிரிப்பை வரவைக்கும்.
ஸ்நேக் பாபு
மாதவன், பாவனா நடிப்பில் வெளியான ஆர்யா படத்தில் ஸ்நேக் பாபுவாக நடித்திருப்பார் வடிவேலு. முதலில் பிச்சைக்காரனாக இருக்கும் இவர் பின்னர் அரசியல்வாதியாக மாறி காமெடியிலும் அதகளம் செய்திருப்பார். அதில் அவர் தனது பெயரை சொல்லும் ஸ்டைலும் வேறலெவலில் இருக்கும். வடிவேலு காமெடியால் ஓடிய படங்களில் இதுவும் ஒன்று.
பாடி சோடா
வடிவேலுவின் மற்றுமொரு மாஸ்டர் பீஸ் கேரக்டர் என்றால் அது போக்கிரி படத்தில் இடம்பெறும் பாடி சோடா கேரக்டர் தான். இதில் அவர் பேசும் ‘அந்த குரங்கு பொம்மை என்ன விலை’, ‘வா சுருதி’, ‘லொஜக் மொஜக் பஜக்’ ஆகிய வசனங்கள் இன்றளவும் ரசிக்கப்பட்டு வருகின்றன.