தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் சமீபத்திய பேட்டியில் தனது கைவசம் உள்ள படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதன்படி இவர் நடிப்பில் தற்போது ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தை பாண்டிராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக டாக்டர் பட நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். பக்கா கமர்ஷியல் படமாக உருவாகி உள்ள இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்து உள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வருகிற பிப்ரவரி மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையடுத்து பாலா இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இப்படத்தை அவரின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி தயாரிக்கிறது.
இதன்பின்னர் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார் சூர்யா, இப்படத்தை வெற்றிமாறன் இயக்க உள்ளார். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க உள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இப்படத்திற்கான ஆரம்பக் கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வாடிவாசல் படத்தில் நடித்து முடித்த பின்னர், சிவா இயக்கும் படத்தில் நடிக்க உள்ளாராம் சூர்யா. வீரம், விஸ்வாசம், சிறுத்தை, வேதாளம், அண்ணாத்த என பல்வேறு கமர்ஷியல் ஹிட் படங்களை இயக்கியுள்ள சிவா, இப்படம் மூலம் நடிகர் சூர்யாவுடன் முதன்முறையாக கூட்டணி அமைக்க உள்ளார். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
இவற்றையெல்லாம், முடித்த பிறகு சுதா கொங்கரா உடன் கூட்டணி அமைக்க உள்ளாராம் சூர்யா. ஏற்கனவே சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்துள்ள சூர்யா தற்போது இரண்டாவது முறையாக அவருடன் கூட்டணி அமைக்க உள்ளார். இது கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் என கூறப்படுகிறது.