பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் துணை இயக்குனராக இருந்து, பின்னர் நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான 'சாமுராய்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாலாஜி சக்திவேல். இவர் இயக்கும் படங்கள் வழக்கமான கமர்ஷியல் படங்களை போல் இல்லாமல் சற்று வித்தியாசமாகவும், இயல்பாகவும் இருந்தது இவரை ரசிகர்கள் மத்தியில் தனியாக அடையாளப்படுத்தியது.
குறிப்பாக இவர் இயக்கத்தில் பரத் நடிப்பில் வெளியான 'காதல்', தமன்னா நடித்த 'கல்லூரி', மனிஷா யாதவ் நடித்த 'வழக்கு எண் 18 / 9 ' ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. வழக்கு எண் 18 / 9 படத்திற்காக தேசிய விருது, உட்பட பல விருதுகளைப் பெற்றார். இதைத்தொடர்ந்து, 'யார் இவர்கள்', 'ரா ரா ராஜசேகர்' ஆகிய படங்களை இயக்க உள்ளதாக அறிவித்தார் பாலாஜி சக்திவேல். பின்னர் அந்த படங்கள் கிடப்பில் போடப்பட்டது.
சமீபத்தில் இயக்குனர் என்பதைத் தாண்டி, 'அசுரன்' , 'வானம் கொட்டட்டும்' ஆகிய படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தி இருந்தார். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியில் செல்வன் படத்தில் நடித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக நடிப்பில் கவனம் செலுத்தி வந்த பாலாஜி சக்திவேல், தற்போது மீண்டும் படம் இயக்க தயாராகி வருகிறார். அதன்படி அவர் அடுத்ததாக இயக்க உள்ள படத்தில் இயக்குனர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமாக உள்ளார் அர்ஜித் ஷங்கர்.
மேலும் இது காதல் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என கூறப்படுகிறது. பரத் நடிப்பில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான காதல் படத்தை பாலாஜி சக்திவேல் தான் இயக்கி இருந்தார். பிளாக்பஸ்டர் ஹிட்டான இப்படத்தை இயக்குனர் ஷங்கர் தனது எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.