உயிருக்கு போராடிய கொரோனா நோயாளிகளுக்கு மின்னல் வேகத்தில் உதவிய சோனு சூட்..! குவியும் பாராட்டு..!

First Published | Apr 16, 2021, 12:41 PM IST

தன்னலம் கருதாது, ஏழை, எளிய, மக்களுக்காக சொத்துக்களை அடமானம் வைத்து பல உதவிகளை, செய்து வந்த சோனு சூட், தற்போது கொரோனா நோயாளிகளுக்கும் உதவியுள்ளார். இதை தொடர்ந்து இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 

அனுஷ்காவின் அருந்ததி, சிம்புவுடன் ஒஸ்தி உள்ளிட்ட படங்களில் வில்லன் நடிகராக வலம் வந்த சோனு சூட், திரையில் வில்லனாக இருந்தாலும் நிஜத்தில் ஹீரோ என்பதை நிரூபித்துவிட்டார். கொரோனா லாக்டவுன் காலத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப பேருந்து ஏற்பாடு செய்து கொடுத்தது முதல் நம்ம ஊர் மருத்துவ மாணவர்கள் ரஷ்யாவில் இருந்து சென்னை திரும்ப தனி விமானம் ஏற்படுத்திக் கொடுத்தது வரை கணக்கில்லாத உதவிகளை செய்தார்.
அதன் பிறகு தனது சோசியல் மீடியா பக்கங்களில் நாளுக்கு நாள் உதவி கேட்டு வருவோருக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். அதுமட்டுமின்றி அடுத்தடுத்து உதவி கேட்போருக்கு கொடுப்பதற்காக தனது பெயரிலும், மனைவி சோனாலி பெயரிலும் உள்ள 2 கடைகள் 6 குடியிருப்புகள் என மொத்தம் 8 சொத்துக்களை 10 கோடிக்கு அடமானம் வைத்துள்ளார்.
Tap to resize

இப்படி மக்கள் சேவையில் தீவிரமாக இறங்கியுள்ளதால் சோனு சூட்டிற்கு, தற்போது திரையிலும் நல்ல காலம் ஆரம்பித்துள்ளது. அதாவது ஹீரோவாக நடிக்க பல படங்களில் வாய்ப்பு குவிந்து வருவதாக கூறப்படுகிறது. தன்னலம் கருதாது எளிய மக்களுக்காக சொத்துக்களை அடமானம் வைத்து கூட உதவ வேண்டும் என முடிவெடுத்துள்ள சோனு சூட்டை அவரது ரசிகர்கள் கோவில் கூட கட்டி விட்டனர்.
இன்னிலையில், இவரை கௌரவிக்கும் விதமாக, ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தங்களுடைய 747 விமானத்தில் சோனுசூட்டின் பிரம்மாண்டமான போஸ்டரை ஒட்டி சிறப்பித்துள்ளது. இப்படி ஒரு சிறப்பை பெறும் முதல் இந்திய நடிகர் சோனு சூட் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மீண்டும் கொரோனாவின், இரண்டாவது அலை மீண்டும் தன்னுடைய கொடூர முகத்தை காட்டி வரும் நிலையில்... மீண்டும் மீண்டும் பல உதவிகளை செய்ய துவங்கியுள்ளார்.
அந்த வகையில்... இந்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக அவதிப்படுவதை அறிந்து, உடனடியாக அந்த மருத்துவமனைக்கு 10 ஆக்சிஜன் சிலிண்டர்களை சோனுசூட் அனுப்பி வைத்துள்ளார். மேலும் கொரோனா காலத்தில் உதவி தேவைப்பட்டால் தன்னிடம் கேட்பதற்கு யாரும் தயங்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதனை அடுத்து சோனு சூட் அவர்களுக்கு மீண்டும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Latest Videos

click me!