தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சர்வானந்த். இவர் தமிழிலிலும் ஒரு சில படங்களில் நாயகனாக நடித்துள்ளார். அந்த வகையில் தமிழில் நடிகர் சர்வானந்த் முதன்முதலில் நடித்த திரைப்படம் காதல்னா சும்மா இல்லை. இப்படம் கடந்த 2008-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது.
இதையடுத்து கடந்த 2011-ம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் வெளிவந்த எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார் சர்வானந்த். இப்படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தது.
இதன்பின்னர் 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் சேரன் இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு ரிலீஸ் ஆன ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை என்கிற படத்தின் மூலம் கம்பேக் கொடுத்த சர்வானந்த், பின்னர் மீண்டும் தெலுங்கு படங்களில் மட்டும் கவனம் செலுத்த தொடங்கினார்.
இதையடுத்து 7 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் கணம் என்கிற டைம் டிராவல் படம் மூலம் கோலிவுட்டில் கம்பேக் கொடுத்தார். இப்படம் கடந்தாண்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இப்படத்தில் நடிகை அமலாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
நடிகர் சர்வானந்த்திற்கு கடந்த ஜனவரி மாதம் திருமணம் நிச்சயமானது. அவர் தனது நீண்ட நாள் காதலியான ரக்ஷிதா ரெட்டியை கரம்பிடிக்க உள்ளதாக ஜனவரி மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த நிச்சயதார்த்த நிகழ்வில் ஏராளமான திரையுலக பிரபலங்களும் கலந்துகொண்டனர்.
இதையும் படியுங்கள்... சர்வானந்த் ரக்ஷிதா ரெட்டி திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள்!
இதையடுத்து 5 மாதங்கள் ஆகியும் நடிகர் சர்வானந்த் திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிடாமல் இருந்து வந்ததால், அவரது திருமணம் நின்றுவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. இதையடுத்து உடனடியாக திருமண தேதியை அறிவித்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தது சர்வானந்தின் குடும்பம்.
அந்த வகையில் திருமணம் ஜூன் முதல் வாரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், கடந்த வாரம் நடிகர் சர்வானந்த் திடீரென கார் விபத்தில் சிக்கினார். அவரின் கார் டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக இதில் சர்வானந்திற்கு காயங்கள் எதுவும் இல்லை.
இந்நிலையில், நடிகர் சர்வானந்தின் திருமணம் இன்று கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. ஜெய்ப்பூரில் உள்ள லீலா பேலஸில் நடிகர் சர்வானந்தின் திருமணம் நடைபெற்றது. நடிகர் சர்வானந்தின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.