
தெலுங்கு சூப்பர் ஸ்டாரும், தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.வுமான நந்தமுரி பாலகிருஷ்ணா அவ்வப்போது பல சர்ச்சைகளில் சிக்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் 'கேங்க்ஸ் ஆஃப் கோதாவரி' படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வின் போது அவர் நடிகையை அஞ்சலியைத் தள்ளிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தன்னை அவர் தள்ளிவிட்ட போது அதனை அஞ்சலி சிரித்துக் கொண்டே சமாளித்தாலும், இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பாலகிருஷ்ணாவின் அவமரியாதை நடத்தையை கடுமையாக விமர்சித்தனர்.
ஆனால் நடிகர் பாலகிருஷ்ணா சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறை அல்ல. தனது ரசிகர்களை அறைந்ததது, சக ஊழியர்களை அசிங்கப்படுத்தியது, பெண்கள் குறித்து அவதூறாக பேசியது என பல நிகழ்வுகளை சொல்லலாம். அந்த வகையில் பாலகிருஷ்ணா சர்ச்சையில் சிக்கிய சம்பவங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
2016-ம் ஆண்டு ‘சாவித்ரி’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது பெண்களுக்கு எதிராக ஆபாசமாக கருத்து தெரிவித்ததாக நந்தமுரி பாலகிருஷ்ணா மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அவர் பேசிய போது, "நான் ஈவ் டீசிங் வேடங்களில் நடித்து பெண்களை பின்தொடர்ந்தால், என் ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள். ஒரு முத்தம் கொடுக்க வேண்டும் அல்லது அந்த பெண்ணை கர்ப்பமாக்க வேண்டும். அவ்வளவு தான்” என்று கூறினார்.
அவரது கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) வெளியிட்ட அறிக்கையில், “பாலகிருஷ்ணா தனது கருத்துக்கு வருந்துவதாகவும், எந்த பிரிவினரின் உணர்வுகளை புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். திரைப்பட விழாவில் அவர் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை. தனது தந்தை என்.டி.ராமராவிடம் இருந்து பெண்களை மதிக்கும் கலாச்சாரத்தை பெற்றுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நந்தமுரி பாலகிருஷ்ணா தனது ரசிகர்களை அறையும் பல வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. ஆந்திர மாநிலம் நந்தியாலில் தேர்தல் பிரசாரத்தின் போது, தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரை அறைந்தார். பின்னர், 2017 ஆம் ஆண்டில், தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் பூமா பிரம்மானந்த ரெட்டிக்காக பிரச்சாரம் செய்தபோது, ஆதரவாளர்களில் ஒருவர் பாலகிருஷ்ணாவுக்கு மலர் மாலை அணிவிக்கும் போது அவர் மீது விழுந்தார். இதனால் ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணா அந்த ரசிகரை அறைந்து தள்ளிவிட்டார்.
நடிகர் 2021 இல் ஹிந்துபூரில் தனது போட்டோ எடுத்த ரசிகரை அவர் அறைந்தார். 2004 ஆம் ஆண்டில், பாலகிருஷ்ணா தனது மனைவி வசுந்தரா தேவியின் பெயரில் பதிவு செய்யப்பட்ட ரிவால்வரைப் பயன்படுத்தி திரைப்பட தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளியான சத்யநாராயண சவுத்ரியை துப்பாக்கியால் சுட்டார் பால கிருஷ்ணா.
இதை தொடர்ந்து உடனடியாக நகரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பாலகிருஷ்ணா கைது செய்யப்பட்ட நிலையில் பெல்லம்கொண்டாவும் சத்தியநாராயணாவும் தன்னை கத்தியால் (கட்டர்) தாக்கியதாகவும் தற்காத்து கொள்ளவே அவர்களை துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறினார். தன்னைக் கொல்ல பாலகிருஷ்ணா துப்பாக்கியால் சுட்டதாக பெல்லம்கொண்டா பத்திரியாளர்களிடம் கூறினார். இறுதியில், போதிய ஆதாரம் இல்லாததால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
2017 ஆம் ஆண்டு தனது படத்தின் படப்பிடிப்பின் போது, தனது உதவியாளரை அடித்த , ஷூ லேஸ் கட்டச் சொன்ன வீடியோ இணையத்தில் வைரலானது, ஷூ லேஸ்களைக் கட்டச் சொல்லி தனது உதவியாளரின் தலையில் அவர் அடித்தார். இதை தொடர்ந்து தனது ஊழியரை மோசமாக நடத்தியதாக அவர் மீது விமர்சனம் எழுந்தது.
இதனிடையே நடிகை ராதிகா ஆப்தே, நந்தமுரி பாலகிருஷ்ணாவுடன் நடித்த தனது கசப்பான அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டார். 'லெஜண்ட்' மற்றும் 'லயன்' ஆகிய இரண்டு தெலுங்குப் படங்களிலும் பாலகிருஷ்ணாவுடன் பணியாற்றிய நடிகை ராதிகா ஆப்தே இதுகுறித்து பேசினார்.
அப்போது “நான் தென்னிந்திய படங்களில் நடித்தேன், அவர்கள் உங்களுக்கு நன்றாக சம்பளம் தருகிறார்கள், நீங்கள் அதற்கு தகுதியானவர். நான் அதை பொதுமைப்படுத்த மாட்டேன், ஆனால் நான் பணியாற்றிய படங்களில், (பாலின சமத்துவம் இல்லை) இருந்தது. இந்த மனிதர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள், நீங்கள் இரண்டு மணி நேரத்திற்கு முன் சென்று காத்திருக்க வேண்டும். அவர்கள் என்னை வித்தியாசமாக நடத்துவார்கள்.
அந்த தெலுங்கு படத்தில் எனது முதல் நாள், நான் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் நான் படுத்திருந்தேன். அப்போது ஒரு நடிகர் உள்ளே வந்தார். எனக்கு அவரைத் தெரியாது, அவர் என் கால்களை கூசும்படி தொட்டார். உடனே நான் எழுந்து அனைவரின் முன்னிலையிலும் அப்படி செய்யாதீங்க என்று கூறிவிட்டேன். அவர் அவர் ஒரு பெரிய நடிகர். அப்படியெல்லாம் செய்யாதே என்று நான் கூறினேன். அவர் அதை எதிர்பார்க்கவில்லை, ஆனால் அதன் பிறகு அவர் என்னைத் தொடவில்லை. ரஜினிகாந்த் படத்தில் எனக்கு இப்படி நடந்ததில்லை. குறிப்பாக நான் நடித்த இரண்டு தெலுங்கு படங்களின் போது இந்த சம்பவம் நடந்தது என்று தெரிவித்தார்.