
Manikandan Talk About Tamil Cinema : தமிழ் சினிமாவானது உச்சத்தில் இருக்கும் நடிகர்களைத் தான் இன்று வரை நம்பிக் கொண்டிருக்கிறது. ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய், அஜித், தனுஷ், விக்ரம், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் என்று மாஸ் ஹீரோக்களை வைத்து தான் அதிக பட்ஜெட்டில் படம் எடுக்கப்பட்டு தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் எடுத்து வருகிறது.
2024 ஆம் ஆண்டு திரைக்கு வந்த கோட், தங்கலான், வேட்டையன், அமரன், கங்குவா ஆகிய படங்களில் அதிக வசூல் குவித்த படங்களின் பட்டியலில் விஜய் நடித்த கோட் படம் நம்பர் 1 இடம் பிடித்திருக்கிறது. கிட்டத்தட்ட ரூ.400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படமானது ரூ.455 கோடி வரையில் வசூல் குவித்து அதிக வசூல் குவித்த படங்களின் பட்டியலில் நம்பர் 1 இடம் பிடித்திருக்கிறது.
இந்தப் படத்திற்கு பிறகு ரூ.260 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ரஜினிகாந்தின் வேட்டையன் ரூ.300 கோடி வரையில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குவித்துள்ளது. இதையடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வந்த அமரன் கிட்டத்தட்ட ரூ.200 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரூ.335 கோடி வரையில் வசூல் குவித்து அதிக வசூல் குவித்த படங்களின் பட்டியலில் 2ஆவது இடம் பிடித்திருக்கிறது.
இப்போது சிவகார்த்தியான் அடுத்தடுத்து மாஸ் இயக்குநர்களின் இயக்கத்தில் நடித்து வருகிறார். அமரன் படத்தை ஹிட் கொடுத்த இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் தன்னுடைய 55ஆவது படத்தில் நடிக்கிறார். இப்படி ஒரு படத்தை ஹிட் கொடுத்ததுமே அவரைத் தேடி இயக்குநர்களும் சரி, ஹீரோக்களும் சரி தேடி வரும் நிலையில் வளர்ந்து வரும் நடிகர்களின் கதை என்னாகும் என்ற கேள்வி எழுகிறது.
குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்படும் கதை நன்றாக இருந்தால் மட்டுமே ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைக்கிறது. அதற்கு லப்பர் பந்து ஒரு சான்று. அப்படி எல்லா நடிகர்களுக்கும் இப்படியான கதை அமைந்துவிடுமா என்ற கேள்வி எழுகிறது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களின் பட்டியலில் அசோக் செல்வன், தினேஷ், ஹரிஷ் கல்யாண், மணிகண்டன், பிரதீப் ரங்கநாதன் போன்ற நடிகர்கள் இருக்கிறார்கள்.
இவர்களுக்கு முன் சிம்பு, ஜீவா, கார்த்தி, விஷ்ணு விஷால், ஆர்யா போன்ற நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால், இவர்களால் இன்னும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுக்க முடியவில்லை. ரூ.300 கோடிக்கு அதிகமாக வசூல் குவிக்க முடியவில்லை. தமிழ் சினிமா எப்போதும் மாஸ் ஹீரோக்களை மட்டுமே நம்பியிருக்கிறது. அவர்களைத் தான் கொண்டாடுகிறது.
இந்த நிலையில் தான் நடிகரும், திரைக்கதை எழுத்தாளருமான மணிகண்டன் 2 பேருக்குள்ளேயே தமிழ் சினிமாவை அடக்கி வைத்திருக்கிறோம் என்று சினிமா குறித்து விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: தமிழ் சினிமாவை 2 பேருக்குள்ளேயே அடக்கி வைத்திருக்கிறோம். இதுவே ஹாலிவுட், டோலிவுட், மல்லுவுட், கன்னடவுட்டில் எல்லாம் கிட்டத்தட்ட 10 முதல் 15 ஹீரோக்கள் வரை இருக்கிறார்கள்.
கடைசி 4 மாதங்களில் மட்டும் நான் கிட்டத்தட்ட 140க்கும் அதிகமான கதைகளை நான் கேட்டிருக்கிறேன். இது போன்று எத்தனையோ பேர் இருப்பார்கள். அப்படியிருக்கும் போது கிட்டத்தட்ட 2000, 3000 கதைக்கு மேல் இருக்கும் அல்லவா. ஆனால், வெறும் 4, 5 ஹீரோக்களை வைத்தே தமிழ் சினிமா இயங்குகிறது. 40, 50 ஹீரோக்கள் வர வேண்டும். ஆனால், ஒரு நடிகர் இத்தனை கோடி சம்பாதிக்கிறார் என்பதை பொறுத்து தான் தமிழ் சினிமா இயங்க வேண்டுமா? அப்படி என்ன அவசியம் இருக்கிறது. சினிமாவை நம்பி எத்தனையோ நடிகர்கள் இருக்கிறார்கள். இன்னும் வருகிறார்கள். அவர்களுக்கும் சினிமா வாய்ப்பு கொடுக்க வேண்டும் அல்லவா என்று கூறியிருக்கிறார்.
நடிகரும், இயக்குநரும், திரைக்கதை எழுத்தாளுருமான மணிகண்டன் 2013 ஆம் ஆண்டு முதல் சினிமாவில் நடித்து வருகிறார். மிகிக்கிரி கலைஞராகவும் திகழ்கிறார். ரஜினிகாந்த், ரகுவரன் மாதிரியே பேசி அசத்தக் கூடியவர். பீட்சா 2, இந்தியா பாகிஸ்தான், இன்று நேற்று நாளை, ஜெய் பீம், குட் நைட், லவ்வர், சில நேரங்களில் சில மனிதர்கள் என்று பல படங்களில் நடித்துள்ளார்.
பீட்சா 2, விக்ரம் வேதா, விஸ்வாசம், தம்பி, சில நேரங்களில் சில மனிதர்கள் ஆகிய படங்களுக்கு திரைக்கதை எழுத்தாளராகவும் இருக்கிறார். தற்போது இவரது நடிப்பில் குடும்பஸ்தன் என்ற படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.