சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையனாக நடித்து அனைவருக்கு பரிட்சயமானவர் கவின். அந்த சீரியல் ஒளிபரப்பாகி வந்த சமயத்தில் இவரை வேட்டையன் என்று சொன்னால் தான் அனைவருக்கும் தெரியும் அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் ரீச் ஆகி இருந்தது கவினின் வேட்டையன் கேடக்டர்.
இதையடுத்து சினிமாவில் எண்ட்ரி கொடுத்த கவின் நட்புனா என்னன்னு தெரியுமா என்கிற படத்தின் மூலம் ஹீரோவானார். இப்படம் பெரியளவில் வெற்றியடையாததால் இயக்குனர் நெல்சனிடம் உதவி இயக்குனராக சேர்ந்த கவின், அவர் இயக்கிய கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.
பிக்பாஸ் டைட்டில் வெல்லும் வாய்ப்பை நழுவவிட்டாலும், அந்நிகழ்ச்சி கவினுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்நிகழ்ச்சிக்கு பின்னர் தமிழ் சினிமாவில் கவினுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. அந்த வகையில் கடந்த 2021-ம் ஆண்டு அவர் நடிப்பில் வெளிவந்த லிஃப்ட் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதையடுத்து புதுமுக இயக்குனர் கணேஷ் பாபு இயக்கத்தில் டாடா என்கிற படத்தில் நடித்தார் கவின். கடந்த பிப்ரவரி மாதம் வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வசூலை குவித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. டாடா படத்தின் வெற்றி மூலம் கவினின் மார்க்கெட்டும் கோலிவுட்டில் எகிறி உள்ளது.
இந்த நிலையில், நடிகர் கவினுக்கு இன்று திருமணம் நடைபெற்று உள்ளது. அவர் தனது நீண்ட நாள் காதலியான மோனிகா டேவிட் என்பவரை கரம்பிடித்து உள்ளார். கவின் - மோனிகா டேவிட் தம்பதியின் திருமணம் சென்னையில் உள்ள பார்க் ஹயாத் ஹோட்டலில் வைத்து பிரம்மாண்டமாக நடைபெற்றது.