தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பெயருக்கும் புகழுக்கும் சொந்தக்காரர்கள் விஜயகுமார் - மஞ்சுளா ஜோடி. இவர்களுடைய மொத்த குடும்பமும் கலைக்குடும்பம் தான்.
விஜயகுமாரின் மகனான அருண் விஜய், அப்பாவின் அடையாளத்தை பெரிதாக பயன்படுத்தாமல் தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்திறமையால் முன்னுக்கு வந்துள்ளார். வெற்றி, தோல்விகள் அடுத்தடுத்து வந்த போதும் கடினமாக உழைத்து வருகிறார்.
அதேபோல் விஜயகுமாரின் மூத்த மனைவிக்கு அனிதா, கவிதா என்ற இரு மகள்களும், மஞ்சுளாவிற்கு வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகிய மகள்கள் உள்ளனர். இதில் மஞ்சுளாவின் மகள்கள் அனைவரும் திரையுலகில் முன்னணி நடிகைகளாக வலம் வந்தவர்கள்.
இத்தகைய பெருமைகளை எல்லாம் கொண்ட கலைக்குடும்பத்தின் பெயரைக் காப்பாற்ற அடுத்த வாரிசு ரெடியாகிவிட்டது. அருண் விஜய்யின் மகனான ஆர்னவ் விஜய் தனது கோலிவுட் பயணத்தை இன்று முதல் ஆரம்பித்துள்ளார். ஆமாங்க... விரைவில் தாத்தா, அப்பாவை போலவே ஆர்னவ் விஜய் வெள்ளித்திரையில் கால்பதிக்க உள்ளார். அதுவும் குழந்தை நடசத்திர ஹீரோவாக அசத்த உள்ளார்.
நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2D Entertainment தற்போதைய குழந்தைகள் அறிய வேண்டிய பல விஷயங்கள் குறித்த படங்களை தயாரித்து வருகிறது. அதேபோல் குழந்தைகளை மையமாக வைத்து தயாராக உள்ள ஒரு படத்தில் தான் ஆர்னவ் விஜய் அறிமுகமாகிறார்.
இப்படத்தை நடிகர் சூர்யா தயாரிக்க, ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், மற்றும் RB Films S.R.ரமேஷ் பாபு, இணை தயாரிப்பு செய்கின்றனர். இயக்குநர் சரோவ் சண்முகம் படத்தை இயக்க உள்ளார்.
இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் சூர்யா, அருண் விஜய், விஜயகுமார் மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர்.
படம் முழுக்க முழுக்க ஊட்டியின் பின்னணியில் உருவாக உள்ளதாகவும், ஒரு சிறுவனுக்கும், அவனுடைய செல்ல நாய்க்குட்டிக்கும் அழகான அன்பையும் உறவையும் படத்தில் காட்ட உள்ளதாகவும் 2D Entertainment நிறுவனத்தின் CEO ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் தெரிவித்துள்ளார்.