
இளம் வயதிலேயே துணை முதல்வர் என்கிற மிகப்பெரிய பொறுப்பை வகித்து வரும், உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு குறித்த விவரங்களை தெரிந்து கொள்வோம்.
இன்று தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் திமுக கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு க ஸ்டாலின் - துர்கா தம்பதிகளின் மகன் தான் உதயநிதி ஸ்டாலின். 1977 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்து சினிமாவில், விநியோகஸ்தராகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமான பின்னரே அரசியலில் இணைந்தார் உதயநிதி.
திரையுலகில் 2008 ஆம் ஆண்டு, தளபதி விஜய் நடிப்பில் தரணி இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'குருவி'. இந்த படத்தை ரெட் ஜெயின் மூவிஸ் மூலம் தயாரித்தார் உதயநிதி. முதல் படமே 18 கோடியில் தயாரித்த உதயநிதிக்கு இந்த படத்திற்கு தோல்வியை கொடுத்த போதிலும், இதை தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு சூர்யாவை வைத்து இயக்கிய, 'ஆதவன்' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
கே எஸ் ரவிக்குமார் இயக்கிய இந்த படத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். மேலும் வடிவேலு, ராகுல் தேவ், ஆனந்த் பாபு, சரோஜா தேவி உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்திருந்தது. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் உதயநிதிக்கு வெற்றி படமாக அமைந்தது. மேலும் இந்த படத்தில் உதயநிதி சிறப்பு தோற்றத்திலும் நடித்திருந்தார். எனவே இதுவே இவருக்கு ஒரு நடிகராக அறிமுக படமாக மாறியது.
தயாரிப்பாளராக மட்டுமின்றி விநியோகஸ்தராகவும் வலம் வந்த உதயநிதி, இதுவரை 8 படங்களை மட்டுமே தயாரித்திருந்தாலும்... பல சூப்பர் ஹிட் படங்களை விநியோகம் செய்துள்ளார். குறிப்பாக விண்ணைத்தாண்டி வருவாயா, திரைப்படத்தில் துவங்கி... மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், மைனா, பக்ரீத், அரண்மனை 3, ராதே ஷாம், விக்ரம், என பல பிக் பட்ஜெட் படங்களை விநியோகம் செய்துள்ளார். பொன்னியின் செல்வன் 1 மற்றும் பொன்னியின் செல்வன் 2 என இரண்டு பாகங்களையும் தமிழகத்தில் வினியோகித்த பெருமை இவரையே சேரும்.
தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும், தன்னுடைய வெற்றி பயணத்தை உறுதி செய்த உதயநிதி, 2012ஆம் ஆண்டு 'ஒரு கல் ஒரு கண்ணாடி' திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். எம்.ராஜேஷ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம், காமெடி கலாட்டாவாக வெளியானது. இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்திருந்தார். மேலும் சந்தானத்தின் காமெடி மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது.
இதன் பின்னர் இது கதிர்வேலன் காதல், நண்பேண்டா, கெத்து, மனிதன், சரவணன் இருக்க பயமேன், நிமிர், என பல படங்களில் நடித்தார். இவர் நடித்த படங்கள் பெரும்பாலும் தோல்வி அடைந்த போதிலும்... சைக்கோ, மாமன்னன், போன்ற சில படங்கள் வெற்றி பெற்றன. 2021 ஆம் ஆண்டு தன்னுடைய அரசியல் வருகையை உறுதி செய்த உதயநிதி ஸ்டாலின், 'மாமன்னன்' தான் தன்னுடைய கடைசி திரைப்படம் என்பதை அறிவித்தார். இந்த படத்தை 'பரியேறும் பெருமாள்' படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கி இருந்தார். ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்த இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் உதயநிதிக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
2021 ஆம் ஆண்டு சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு, சட்டமன்ற உறுப்பினராக மாறிய உதயநிதி ஸ்டாலின், கடந்த ஆண்டு துணை முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில், இவருடைய சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டபோது வேட்புமனு தாக்கல் செய்தார். அதில் தன்னுடைய சொத்து விபரங்களை பிரமாண பத்திரத்தில் அறிவித்தார். அதில் உதயநிதி பெயரில் 26.67 கோடி சொத்து இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இவரிடம், ரூ. 21 கோடியே 13 லட்சத்து 9 ஆயிரத்து 650 ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்களும், ரூ.6 கோடியே 54,39,52 ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் தன்னிடம் இருக்கும் ரேஞ்ச் ரோவர் காரின் மதிப்பு ஒரு கோடிக்கும் மேல் என தெரிவித்திருந்தார். கையில் ரொக்கமாக 75 ஆயிரம் இருப்பதாகவும் மொத்த வருமானம், 4 லட்சத்து 89 ஆயிரத்து 520 ரூபாய் என அறிவித்திருந்தார்.
முதல்வர் மு க ஸ்டாலின் சொத்து குறித்து விவரம் தெரிவித்த போது, ரூ.7.19 கோடி மட்டுமே தன்னிடம் சொத்துக்கள் உள்ளதாக கூறி இருந்தார். இதன் மூலம், தன்னுடைய தந்தை ஸ்டாலினை விட உதயநிதி மூன்று மடங்கு சொத்துக்கு அதிபதியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.