Published : Jul 26, 2022, 02:25 PM ISTUpdated : Jul 26, 2022, 02:27 PM IST
மன்விந்தர் சிங் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர் போலீசார். இவர் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் வேலை பெற முயல்பவர் என்பது தெரியவந்துள்ளது.
பாலிவுட் பிரபலமான கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கவுசல் தம்பதியினருக்கு சமீபத்தில் மர்ம நபர் ஒருவரால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து நட்சத்திர ஜோடிகள் மும்பை காவல் நிலையத்தில் அளித்த புகாரில் தங்களை கொலை செய்து விடுவோம் என instagram வாயிலாக கொலை மிரட்டல் வந்ததாக புகார் அளித்தனர்.இதையடுத்து குற்றவியல் மிரட்டல் பின் தொடர்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் எஃப் ஐ ஆர் பதிவு செய்த போலீசார் அந்த மர்மநபரை தேடி வந்தனர். இந்த செய்தி காட்டுத்தீ போல பரவியது.
பின்னர் புகார் தொடர்பாக துரித விசாரணை செய்த போலீசார் அந்த மர்ம நபரை கண்டு பிடித்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த மன்விந்தர் சிங் என்பவரை அடையாளம் கண்டுள்ளனர். அவரிடம் விசாரித்ததில் கத்ரீனாவின் ரசிகர் என்பது தெரியவந்துள்ளது. இவர் இன்ஸ்டாகிராமில் கத்ரீனா கைப்பை பின் தொடர்ந்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார் என்பதும் உறுதியானது.
இதை தொடர்ந்து மன்விந்தர் சிங் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர் போலீசார். இவர் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் வேலை பெற முயல்பவர் என்பது தெரியவந்துள்ளது.
முன்னதாக சல்மான்கானுக்கும் அவரது தந்தை சலீம் கானுக்கும் கொலை மிரட்டல் கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலாவின் கதியை தந்தை, மகன் இருவரும் சந்திக்க நேரிடும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதை எடுத்து சல்மான்கான் மற்றும் அவரது குடும்பத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக ஸ்வாரா பாஸ்கருக்கு வந்த மிரட்டல் கடிதத்தில் வீர் சாவர்க்கரை இழிவுபடுத்தியதை நாட்டு இளைஞர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என குறிப்பிட்டு மிரட்டல் விடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.