
ரசிகர்களுக்காக அவ்வப்போது திரை நட்சத்திரங்கள் உதவி செய்வதை பார்த்திருக்கிறோம். ஆனால், ஒரு நடிகருக்கு அவரது தீவிர ரசிகை ஒருவர் செய்த உதவி பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. அப்படி அவர் என்ன செய்திருக்கிறார் என்று தானே யோசிக்கிறீர்கள்... அவர் தன்னுடைய கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை நடிகர் பெயரில் எழுதி வைத்துள்ளார். அந்த பெண் ரசிகை தான் இறப்பதற்கு முன்பு சுமார் ரூ.72 கோடி மதிப்புள்ள சொத்துக்களை தனக்கு மிகவும் பிடித்த நடிகரின் பெயரில் எழுதி வைத்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்தத் தொகையை அந்த நடிகர் என்ன செய்தார் என்று தெரிந்தால், உங்களால் பாராட்டாமல் இருக்க முடியாது. அந்தக் கதை என்னவென்று பார்ப்போம்.
இத்தகைய அபூர்வமான அன்பை பெற்ற நடிகர் வேறுயாருமில்லை பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தான். ஒரு காலத்தில் அவர் பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருந்தார். அமிதாப் பச்சனுக்கு இணையாக நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றிருந்தார். சில வழக்குகள், சர்ச்சைகளால் அவரது திரை வாழ்க்கை சரிவை சந்தித்தது. ஆனால், மூன்று கான் நடிகர்களையும் விட சிறந்த நடிகர் சஞ்சய் தத் என்று சொல்லலாம். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு சஞ்சய் தத் வாழ்க்கையில் ஒரு விசித்திரமான சம்பவம் நடந்தது. அந்தச் சம்பவத்தை அவரே சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தினார்.
அதில் சஞ்சய் தத் கூறுகையில், `மும்பையில் உள்ள மலபார் ஹில்ஸில் வசிக்கும் 62 வயதான நிஷா படேல் எனக்கு தீவிர ரசிகை. கடுமையான உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட அவர், தனது கடைசி நாட்களில் தனது பெயரில் இருந்த ரூ.72 கோடி சொத்தை எனது பெயரில் எழுதி வைத்தார். அவர் இறந்த பிறகு அந்தச் சொத்து முழுவதும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்குச் செல்லாமல் எனக்குச் சொந்தமாக வேண்டும் என்று அதில் எழுதியிருந்தார். 2018 ஜனவரி 15 அன்று அவர் இறந்த பிறகு, அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு அந்த உயில் பற்றித் தெரியவந்தது. அதில் அவர் எழுதியதைப் படித்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்தச் செய்தி எனக்குத் தெரிந்தபோது மிகவும் வருத்தப்பட்டேன். சொத்துக்களை எழுதி வைக்கும் அளவுக்கு அவரது அன்பைப் பெற்றதற்குப் பெருமையாக உணர்ந்தேன். அவர் என் மீது காட்டிய அன்பு மிகவும் சிறந்தது. ஆனால் அந்தச் சொத்தில் எனக்கு எந்த உரிமையும் இல்லை. அதனால்தான் அந்த ரூ.72 கோடி சொத்தை நிஷா படேலின் குடும்பத்திற்கே திருப்பிக் கொடுத்தேன். அந்தத் தாயை நான் ஒருபோதும் சந்திக்க முடியாவிட்டாலும், அவர் என் மீது காட்டிய அன்புக்கும், தாய் போன்ற பாசத்திற்கும் என்றென்றும் நான் கடமைப்பட்டிருப்பேன்` என்று சஞ்சய் தத் தெரிவித்தார்.
சஞ்சய் தத், 1981 ஆம் ஆண்டு 'ராக்கி' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். சுனில் தத்தின் மகனாக சினிமாவில் நுழைந்த சஞ்சய் தத், தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார். மாஸ் ஆக்ஷன் படங்களால் ரசிகர்களை மகிழ்வித்தார். `நாம்`, `கல்நாயக்`, `வாஸ்தவ்`, `முன்னா பாய் MBBS` போன்ற படங்களில் தனது திறமையை நிரூபித்தார். பாலிவுட்டின் முன்னணி நடிகராக உயர்ந்தார். உச்ச நட்சத்திரமாக வலம் வந்தபோது, 1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கினார். இந்த வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறைக்குச் சென்று வந்தார். அதன் பிறகு இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கி இப்போது தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழிலும் லியோ போன்ற படங்களில் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.