திரைப்படக் கலைஞர்களுக்கு மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கப்படுவது விருதுகள் தான். அதிலும் இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் தேசிய விருதை வெல்ல வேண்டும் என்பது தான் அனைத்து திரைப்பட கலைஞர்களின் ஆசையாக இருக்கும். திரையுலக ஜாம்பவான்களுக்கே இவ்விருது கிடைக்காத சூழலும் இருக்கிறது. தமிழ் திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் கூட இதுவரை ஒரு முறைகூட தேசிய விருது வாங்கியதில்லை. அதே நிலை தான் அஜித், விஜய்க்கும் உள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு மறக்க முடியாத ஆண்டாகவே இருந்தது. ஏனெனில் அந்த ஆண்டு வெளிவந்த படங்களுக்கான தேசிய விருது கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. அந்த விருது விழாவில் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படத்துக்கு மட்டும் மொத்தம் 5 விருதுகள் கிடைத்தன. இதுதவிர மண்டேலா திரைப்படம் 2 விருதுகளை வென்றது.
24
National Film Award winners
2020-ம் ஆண்டை மிஞ்சும் அளவுக்கு 2021-ம் ஆண்டு பல்வேறு தரமான திரைப்படங்கள் வெளியாகின. இதனால் 69-வது தேசிய விருதுகளிலும் தமிழ் படங்கள் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரசிகர்கள் எதிர்பார்ப்பை எல்லாம் தவிடுபொடி ஆக்கும் விதமாக தேசிய விருது அறிவிப்புகள் வெளிவந்துள்ளன.
69-வது தேசிய விருதை ஒட்டுமொத்தமாக தெலுங்கு மற்றும் இந்தி படங்கள் ஆக்கிரமித்துவிட்டன. இதில் இரண்டு தமிழ் படங்களுக்கு மட்டுமே விருது கிடைத்துள்ளது. அதில் கடைசி விவசாயி திரைப்படத்துக்கு மட்டும் 2 விருதுகள் கிடைத்துள்ளன. அதில் ஒன்று சிறந்த ஜூரி விருது மற்றொன்று சிறந்த தமிழ் படம் விருது. இதுதவிர இரவின் நிழல் படத்தில் இடம்பெற்ற மாயவா தூயவா பாடலை பாடிய பாடகி ஷ்ரேயா கோஷலுக்கு சிறந்த பாடகிக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
இவற்றையெல்லாம் விட ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தது, சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த படம், சிறந்த இயக்குனர் ஆகிய பிரிவுகளுக்காக தான். சிறந்த நடிகருக்கான ஜெய் பீம் படத்துக்காக சூர்யாவோ, அல்லது சார்பட்டா பரம்பரை படத்துக்காக ஆர்யாவோ, அல்லத்து கர்ணன் படத்துக்ககாக தனுஷோ வெல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவர்களையெல்லாம் விட புஷ்பா படத்தில் நடித்த அல்லு அர்ஜுன் தான் சூப்பர் என அவருக்கு அவ்விருதை அறிவித்து இருக்கிறார்கள்.
44
69th National Film awards
அதேபோல் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை ஜெய் பீம் படத்துக்காக உயிரைக் கொடுத்து நடித்த நடிகர் மணிகண்டனுக்கு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதுவும் நடக்கவில்லை. சிறந்த படத்துக்கான போட்டியில் சார்பட்டா பரம்பரை அல்லது ஜெய் பீம் ஆகிய படங்கள் நிச்சயம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதை ராக்கெட்ரிக்கு அறிவித்துள்ளனர்.
இதைப்பார்த்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் கொந்தளித்து வருகின்றனர். தேசிய விருது வழங்குவதில் அரசியல் நடந்துள்ளதாகவும், அதனால் தான் தமிழ் படங்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டு உள்ளதாகவும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.