3 மாதத்தில் 60 பிளாப் படங்களா? கோலிவுட்டின் காலாண்டு ரிப்போர்ட் ஒரு பார்வை
2025-ம் ஆண்டு தொடங்கி விறுவிறுவென சென்று கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு தமிழில் இதுவரை வெளிவந்த 64 படங்களில் 60 படங்கள் தோல்வியை தழுவி இருக்கிறதாம்.
2025-ம் ஆண்டு தொடங்கி விறுவிறுவென சென்று கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு தமிழில் இதுவரை வெளிவந்த 64 படங்களில் 60 படங்கள் தோல்வியை தழுவி இருக்கிறதாம்.
2025 Kollywood Quarterly Report : 2025-ம் ஆண்டு தற்போது தான் தொடங்கியது போல் உள்ளது. ஆனால் அதற்குள் 3 மாதங்கள் ஓடிவிட்டன. இந்த மூன்று மாதங்களில் தமிழ் சினிமா நிலவரம் எந்த அளவுக்கு உள்ளது என்பதை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம். இந்த 3 மாதங்களில் மொத்தம் 64 தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகி உள்ளன. அதில் 60 தோல்வி படங்கள். நான்கே வெற்றிப் படங்கள் தான் இதுவரை வந்துள்ளன. பாக்ஸ் ஆபிஸிலும் இந்த ஆண்டு ஒரு தமிழ் படம் கூட 200 கோடி வசூலை எட்டவில்லை.
ஜனவரி மாத ரிலீஸ் படங்களின் நிலவரம்
ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் பொங்கல் விடுமுறைக்கு போட்டி போட்டு படங்கள் ரிலீஸ் ஆகும். அதேபோல் இந்த வருட பொங்கலுக்கு பாலா இயக்கிய வணங்கான், ரவி மோகனின் காதலிக்க நேரமில்லை, விஷ்ணுவர்தன் இயக்கிய நேசிப்பாயா, ஷான் நிகாம் நடித்த மெட்ராஸ்காரன் ஆகிய புதுப் படங்கள் வந்தாலும் 12 ஆண்டுகளுக்கு முன் ரிலீஸ் ஆக வேண்டிய மத கஜ ராஜா இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் வெற்றிவாகை சூடியது. அப்படம் 50 கோடி வசூல் செய்தது.
ஜனவரி மாதத்தில் மொத்தம் 26 படங்கள் திரைக்கு வந்தன. இதில் இரண்டே இரண்டு ஹிட் படங்கள் தான். அதில் ஒன்று மத கஜ ராஜா மற்றொன்று மணிகண்டன் நடிப்பில் வெளிவந்த குடும்பஸ்தன். இதில் மத கஜ ராஜா 50 கோடியும், குடும்பஸ்தன் 25 கோடியும் வசூல் செய்தது மற்ற படங்கள் பட்ஜெட்டில் பாதி கூட வசூல் செய்யவில்லை. இதனால் கோலிவுட்டுக்கு தொடக்கமே டல் ஆனதாக அமைந்தது.
பிப்ரவரியில் ஒரே ஒரு ஹிட் கொடுத்த கோலிவுட்
ஜனவரி மாதம் பெரியளவில் வசூல் இல்லாவிட்டாலும் பிப்ரவரி மாதம் அஜித் படம் ரிலீஸ் ஆவதால் கோலிவுட் வசூல் வேட்டையாடும் என எதிர்பார்த்திருக்க, ஆரவாரத்துடன் ரிலீஸ் ஆகி புஸ் வானம் ஆனது அஜித்தின் விடாமுயற்சி. அஜித்தின் கெரியரில் மிகப்பெரிய தோல்விப் படமாக விடாமுயற்சி அமைந்தது. இதுக்கா இவ்வளவு பில்டப் கொடுத்தார்கள் என ரசிகர்களே விமர்சிக்கும் அளவுக்கு தான் விடாமுயற்சி இருந்தது. இதையடுத்து காதலர் தினத்தன்று அதிகபட்சமாக 9 படங்கள் ரிலீஸ் ஆகின. அதில் அனைத்துமே தோல்வி அடைந்தன.
பின்னர் கோலிவுட்டுக்கு புத்துயிர் அளிக்கும் விதமாக 21ந் தேதி பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படம் ரிலீஸ் ஆனது. இப்படம் 150 கோடி வசூலித்து ஆறுதல் அளித்தது. இந்த ஆண்டில் அதிக வசூல் செய்த படமும் இதுதான். இதனுடன் ரிலீஸ் ஆன தனுஷின் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் பார்த்த ரசிகர்கள் தனுஷுக்கு ரசிகர்கள் மேல் என்ன கோபம், இப்படி ஒரு படத்தை கொடுத்திருக்கிறார் என விமர்சித்தனர். பிப்ரவரியில் மொத்தம் 19 படங்கள் ரிலீஸ் ஆகின. அதில் ஒரே ஒரு படம் தான் ஹிட் ஆனது.
இதையும் படியுங்கள்... 4 மாதத்தில் 4 பிரம்மாண்ட படங்களுடன் பாக்ஸ் ஆபிஸை பதம் பார்க்க வரும் கோலிவுட்!
வீர தீர சூரனால் தப்பித்த மார்ச்
மார்ச் மாத நிலைமை பிப்ரவரியை விட மோசம். இது பொதுத் தேர்வுகள் நடக்கும் மாதம் என்பதால் பெரும்பாலும் படங்கள் ரிலீஸ் செய்ய மாட்டார்கள். ஆனால் இந்த ஆண்டு வார வாரம் படங்கள் வரிசைகட்டி வந்தன. அந்த வகையில் மார்ச் முதல் வாரம் ஜிவி பிரகாஷின் கிங்ஸ்டன் படம் ரிலீஸ் ஆனது. அப்படம் ஜிவியின் பிளாப் லிஸ்ட்டில் இணைந்தது. பின்னர் மார்ச் இரண்டாம் வாரம் யுவன் தயாரிப்பில் ரியோ நடித்த ஸ்வீட் ஹார்ட் படம் திரைக்கு வந்தது. இப்படமும் தோல்வியை தழுவியது.
மார்ச்சில் முதல் 3 வாரங்கள் வெற்றி இன்றி கோலிவுட் வரண்டு போய் இருக்க, லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வந்து ஹிட் அடித்துள்ளது விக்ரமின் வீர தீர சூரன் திரைப்படம். இப்படம் ரிலீஸ் ஆன ஒரே வாரத்தில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றிநடைபோட்டு வருகிறது. மொத்தமாக மார்ச் மாதத்திலும் 19 படங்கள் ரிலீஸ் ஆகின. அதிலும் ஒரே ஒரு வெற்றிப் படம் தான் வந்துள்ளது.
கோலிவுட்டின் காலாண்டு ரிப்போர்ட்
கோலிவுட்டின் முதல் காலாண்டில் மொத்தம் 64 படங்கள் ரிலீஸ் ஆகி அதில் வெறும் நான்கு படங்கள் மட்டுமே ஹிட் அடித்துள்ளன. எஞ்சியுள்ள 60 படங்களும் தோல்வி படங்களாக அமைந்துள்ளன. இந்த காலாண்டில் கோலிவுட் கற்றுக் கொண்ட பாடம் என்னவென்றால், அஜித் போன்ற முன்னணி நடிகரின் படமாக இருந்தாலும் படம் நன்றாக இருந்தால் தான் பார்ப்பார்கள். இல்லையென்றால் தூக்கி எறிந்துவிட்டு ஒரு மாதத்திற்கு பின் ஓடிடியில் பார்த்துக் கொள்வார்கள். இந்த 64 படங்களில் 50 படங்கள் வந்த சுவடு கூட தெரியவில்லை. அடுத்த 9 மாதங்களில் நிறைய பெரிய நடிகர்களின் படங்கள் வருவதால், கோலிவுட்டுக்கு எட்டாக் கனியாக இருக்கும் 1000 கோடி வசூல் கனவு இந்த ஆண்டிலாவது நனவாகுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்... தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் எம்புரான் படத்தை வாஷ் அவுட் பண்ணிய வீர தீர சூரன்!