சொத்து பத்திரம் தொலைந்துவிட்டதா? கவலை வேணாம்.! இந்த வழிகளைப் பின்பற்றினால் ஈஸியா வாங்கிடலாம்.!

Published : Mar 23, 2026, 05:27 PM IST

How to Get Duplicate Copy of Property Documents Online : சொத்து ஆவணங்கள் என்பது ஒருவரின் வாழ்நாள் சேமிப்பாகும். ஆனால் சொத்து ஆவணங்கள் தொலைந்து விட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

PREV
17
1.காவல் நிலையத்தில் புகாரளித்தல்

சொத்து ஆவணங்கள் தொலைந்து விட்டால் முதலில் பதற்றம் அடையக் கூடாது. பத்திரத்தை எங்கு வைத்தோம்? கடைசியாக எந்த இடத்திற்கு எடுத்துச் சென்றோம்? போன்ற விவரங்களை யோசித்துப் பார்க்க வேண்டும். அமைதியாக அமர்ந்து யோசித்து வீடு முழுவதும் தேட வேண்டும். முயன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகாரளிக்க வேண்டும். அவர்கள் Non Traceable Certificate (கண்டுபிடிக்க முடியவில்லை) என்பதற்கான சான்றிதழ் வழங்குவார்கள். இது முக்கிய ஆவணமாகும்.

27
2.பத்திரிக்கையில் விளம்பரம் செய்தல்

அதன் பின்னர் ஒரு வழக்கறிஞர்களின் உதவியுடன் தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழில் பத்திரம் தொலைந்து போனது பற்றிய பொது அறிவிப்பு கொடுக்க வேண்டும். அந்த அறிவிப்பில் சொத்து சம்பந்தமான முழு விவரங்கள், சர்வே எண், விஸ்தீரணம், பட்டா எண், நான்கு எல்லைகள், பத்திரப்பதிவு எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இருக்க வேண்டும். அசல் பத்திரத்தை வைத்து யாரும் தவறான வழியில் அடமானம் வைத்து கடன் பெறுதல் போன்றவற்றை செய்யக்கூடாது என்றும், பத்திரத்தை கண்டெடுப்பவர்கள் ஒப்படைக்க வேண்டும் என்ற நோக்கில் விளம்பரம் இருக்க வேண்டும். இது சம்பந்தமாக ஆட்சேபனை இருந்தால் ஏழு நாட்களுக்குள் தெரிவிக்குமாறு குறிப்பிட வேண்டும்.

37
3.உறுதிமொழிப் பத்திரம் தயார் செய்தல்

பொது அறிவிப்பு வெளியான ஏழு நாட்களுக்குள் பிறகு இருபது ரூபாய் பத்திரத் தாளில் உறுதிமொழி பத்திரம் தயார் செய்ய வேண்டும். அதில் அந்த பத்திரம் எங்கு எப்படி தொலைந்தது என்கிற தகவலையும், சொத்து விவரங்களையும் முழுவதுமாக குறிப்பிட்டு பத்திர எண், பதிவு செய்த சார்பதிவாளர் அலுவலகத்தின் விவரம், சொத்து யாரிடமிருந்து வாங்கப்பட்டது? அவருடைய பெயர் போன்றவற்றையும் குறிப்பிட வேண்டும். உறுதிமொழி பத்திரத்தில் நாம் கையொப்பம் இடுவதோடு நோட்டரி ஒருவரிடமும் கையொப்பம் பெற வேண்டும்.

47
4.உரிய சான்றுகளை அளித்தல்

அதன் பின்னர் எந்தப் பகுதியில் ஒரிஜினல் பத்திரத்தை தொலைத்தோமோ அந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர்ஔ குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஆகியவரிடம் பின்வரும் ஆவணங்களில் இரண்டு தொகுப்பை இணைத்து புகார் அளிக்க வேண்டும். பத்திரத்தின் நகல், Non Traceable Certificate, புகைப்பட அடையாளச் சான்று, முகவரிச் சான்று, நாளிதழ்களில் வெளியான பொது அறிவிப்பு, வில்லங்கச் சான்றிதழ், உறுதிமொழி பத்திரம் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

57
5.குற்ற ஆவணக் காப்பகம்

நாம் புகார் கொடுக்கும் இடம் மாநகராட்சியின் எல்லைக்குள் அமைந்தால் அது குற்ற ஆவண காப்பகத்திற்கும், மற்ற இடங்களில் அமைந்தால் அது மாவட்ட குற்றத்திற்கும் அனுப்பப்படும். நாம் அனுப்பிய ஆவணங்களை மேற்கண்ட துறையில் பரிசீலனை செய்து அதன் உண்மைத் தன்மையை கண்டறிந்து அத்துறையால் பராமரிக்கப்படும் குற்றம் மற்றும் நிகழ்வுத்தாளில் பதிவு செய்து அதற்கு ஒரு இலக்கம் கொடுத்து திரும்பவும் நாம் புகார் கொடுத்த காவல் நிலையத்திற்கு அனுப்புவார்கள்.

67
6.சார் பதிவாளர் அலுவலகத்தை அணுகுதல்

அந்தக் காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் நமக்கு ஒரு சான்றிதழ் கொடுப்பார். அந்த சான்றிதழில் பத்திரத்தை தொலைத்த இடம், சொத்தின் முழு விவரங்கள், பத்திர எண் ஆகியவற்றை கொடுத்து Crime and Occurrence Sheet-ல் வெளியிடப்பட்டது என்றும், அதற்கு கொடுக்கப்பட்ட இலக்கத்தையும் குறிப்பிட்டு மேலும் அந்த பத்திரத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த சான்றிதழைப் பெற்ற பிறகு சொத்தை பதிவு செய்த சார் பதிவாளர் அலுவலகத்தில் நாம் தொலைத்த அல்லது தவறவிட்ட பத்திரத்தின் நகலுக்கு விண்ணப்பம் செய்து நகல் பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

77
7.நகல் ஆவணம் அவசியம்

முக்கியமாக பத்திரம் தொலைந்து விட்டாலும் நகலை பெறுவதற்கு சொத்து சம்பந்தமான விவரங்கள் நமக்கு தெரிய வேண்டும். அதற்கு சொத்து பத்திரத்தின் நகல் மற்றும் ஜெராக்ஸ் காப்பிகள் நம்மிடம் கட்டாயம் இருக்க வேண்டும். எனவே சொத்து பத்திரங்களை நகல் எடுத்து, அதை ஒரிஜினல் பத்திரங்களுடன் வைக்காமல் தனியாக வைத்திருக்க வேண்டியது அவசியம். வருங்காலத்தில் இது போன்ற சிக்கல்களைத் தவிர்க்க அசல் ஆவணங்களை ஸ்கேன் செய்து Digilocker அல்லது மின்னஞ்சல் ஆகியவற்றில் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories