
மாதச் சம்பளம் பெறும் பலர் தாங்கள் சேமித்த பணத்தை எங்கு முதலீடு செய்வது என்பதில் குழப்பத்தில் உள்ளனர். அவர்கள் கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்து, வருமான வரியை மிச்சப்படுத்தும் வழிகள் பல உள்ளன.
பழைய வரி முறையின் கீழ் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும்போது, வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் ரூ.1,50,000 வரையிலான முதலீடுகளுக்கு வருமான வரி விலக்கு பெறலாம். வருமான வரியைச் சேமிக்க இதுவே சிறந்த வழி. இதுபோன்ற ஐந்து சேமிப்புத் திட்டங்களை பயன்படுத்தி வருமான வரியைச் சேமிக்கலாம்.
கிசான் விகாஸ் பத்திரம்: இந்திய தபால் துறையால் நடத்தப்படும் இந்த சிறுசேமிப்பு திட்டமானது மற்ற திட்டங்களை விட அதிக வட்டியை ஈட்டுகிறது. ஆனால் இந்தத் திட்டத்தில் செய்யப்படும் முதலீடு 115 மாதங்களில், அதாவது 9 ஆண்டுகள் மற்றும் 7 மாதங்களில் முதிர்ச்சியடைகிறது.
இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கான குறைந்தபட்ச வரம்பு ரூ.1,000. அதிகபட்ச வரம்பு இல்லை. கிசான் விகாஸ் பத்திரத்தில் முதலீடு செய்தால், டெபாசிட் செய்த தொகை முதிர்வுக் காலத்தில் இரட்டிப்பாகக் கிடைக்கும். இந்தத் திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டிற்கு 7.4 சதவிகிதம் வட்டி கிடைக்கும்.
தேசிய சேமிப்புச் சான்றிதழ்: தபால் துறை முதலீட்டிற்கான மிகவும் பிரபலமான திட்டம் இது. இந்தத் திட்டம் ஐந்து வருட முதலீட்டு காலம் கொண்டது. இதில் குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் டெபாசிட் செய்யலாம். அதிகபட்ச வரம்பு இல்லை. இந்தத் திட்டம் சரியாக ஐந்து ஆண்டுகளில் முதிர்ச்சியடையும். மத்திய அரசு தற்போது இத்திட்டத்துக்கு 7.7 சதவீத வட்டியைக் கொடுக்கிறது. தேசிய சேமிப்புச் சான்றிதழில் முதலீடு செய்யப்படும் ஒவ்வொரு 1,000 ரூபாயும் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு ரூ.1,449 ஆக மாறும்.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்: மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்காக தொடங்கப்பட்டது. மத்திய அரசு தற்போது வேறு எந்த சேமிப்புத் திட்டத்திலும் இதைவிட அதிக வட்டி தருவதில்லை. தற்போது, இத்திட்டத்தில் செய்யப்படும் முதலீடுகளுக்கு 8.2 சதவீத வட்டி கிடைக்கும். இதே அளவுக்கு வட்டி சுகன்யா சம்ரித்தி யோஜனாவில் மட்டுமே கிடைக்கிறது.
இதில் முதலீட்டுக்கான அதிகபட்ச வரம்பு ரூ.30 லட்சம். ஆனால், குறைந்தது ரூ.1,000 டெபாசிட் செய்ய வேண்டும். மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கான வட்டி ஒவ்வொரு காலாண்டிலும் வழங்கப்படுகிறது. 5 ஆண்டுகளில் முதிர்வடையும்போது, விரும்பினால் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும்.
சுகன்யா சம்ரித்தி யோஜனா: செல்வ மகள் திட்டம் எனப்படும் இந்தத் திட்டம் முதலீடு, வட்டி, முதிரவுத் தொகை என மூன்றிற்கும் வரி விலக்கு பெறக்கூடிய EEE வகை சிறப்புத் திட்டமாகும். 10 வயதுக்கு குறைவான மகள் அல்லது மகள்கள் உள்ள பெற்றோர் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் கீழ், அதிகபட்சம் இரண்டு பெண் குழந்தைகளுக்கு கணக்கு தொடங்கலாம். (இரண்டாவது குழந்தை பிறக்கும்போது இரட்டைப் பெண் குழந்தை பிறந்திருந்தால் மூன்று மகள்களுக்கும் இந்தத் திட்டத்தில் கணக்கு தொடங்க அனுமதி உண்டு)
ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சம் ரூ.1.50 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இத்திட்டத்திலும் அதிகபட்ச வட்டி அளிப்படுகிறது. 8.2 சதவீதம் கூட்டு வட்டியின் பலனைப் பெறலாம். செல்வ மகள் திட்டத்தின் முதிர்வுக் காலம் 21 ஆண்டுகள். ஆனால் 15 ஆண்டுகளுக்கு மட்டும் முதலீடு செய்தால் போதும்.
பொது வருங்கால வைப்பு நிதி: போஸ்ட் ஆபிசில் மிகவும் பிரபலமான திட்டங்களில் இதுவும் ஒன்று. பொது வருங்கால வைப்பு நிதி, அதாவது PPF திட்டம் செல்வ மகள் திட்டத்தைப் போலவே EEE வகையைச் சேர்ந்தது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கான அதிகபட்ச வரம்பு ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம். ஆண்டுக்கு குறைந்தபட்சம் 500 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். தவறினால், முதலீடு செய்யாத ஒவ்வொரு வருடத்திற்கும் ரூ.50 அபராதம் செலுத்த வேண்டும்.
பிபிஎஃப் கணக்கில் முதலீடு செய்யும் தொகைக்கு ஆண்டுக்கு 7.1 சதவீதம் கூட்டு வட்டி கிடைத்து வருகிறது. PPF கணக்கு 15 ஆண்டுகளில் முதிர்ச்சியடைகிறது. ஆனால் அதற்குப் பின்பும் 5-5 ஆண்டுகளாக பல முறை நீட்டிக்கலாம்.