PMMVY Scheme Details in Tamil: இந்தியாவில் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் நலனைக் கருதி மத்திய அரசு, ‘பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா' (PMMVY) திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, இந்தியாவில் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் நலனைக் கருத்தில் கொண்டு ‘பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா’ என்கிற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஜனவரி 1, 2017 அன்று தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், வெற்றிகரமாக 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. பொருளாதார ரீதியாக நலிவடைந்த கர்ப்பிணி பெண்களுக்கு, சத்தான உணவு மற்றும் ஓய்வை வழங்குவதே இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கமாக உள்ளது. தாய்மை காலத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் நிதி சிக்கல்களில் இருந்து தற்காலிக நிவாரணம் அளிக்க இந்த திட்டம் உதவுகிறது.
‘பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா’ திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பெண்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. முதல் குழந்தை பிறக்கும் பொழுது அரசாங்கம் ரூ.5,000 வழங்குகிறது. இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் தாய்க்கு ரூ.6,000 வழங்கப்படுகிறது. இது இடைத்தரகர்களின் தலையீடு எதுவும் இல்லாமல் பயனாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இந்த மானியம் இரண்டு தவணை முறைகளாக வழங்கப்படுகிறது. கர்ப்பத்திற்கு பின்னர் பெயர் பதிவு செய்த உடனேயே ரூ.3,000 கிடைக்கிறது. மீதமுள்ள ரூ.2,000 குழந்தை பிறந்த பின் கிடைக்கிறது.
இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் வெறும் பணம் வழங்குவது மட்டுமே கிடையாது. தாய் சேய் ஆகிய இருவரின் நலனில் அக்கறை செலுத்தும் பொருட்டு நிதியுதவி வழங்கப்படுகிறது. கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள், பெண்களுக்கு செலுத்த வேண்டிய தடுப்பூசிகள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறது. மேலும் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்கவும், முறையான ஊட்டச்சத்து மூலம் தாய்-சேய் இறப்பு விகிதத்தை குறைக்கவும் இந்த திட்டம் உதவுகிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் புள்ளி விவரங்களின்படி, இதுவரை சுமார் 4.5 கோடி பயனாளிகள் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளனர். சுமார் ரூ.19,000 கோடிக்கு அதிகமான தொகை நேரடியாக கர்ப்பிணி பெண்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் அடித்தட்டு பெண்களை சென்றடைந்துள்ளது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.
கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் பால், பழங்கள், முட்டை போன்ற சத்தான உணவுகள் தேவைப்படுகின்றன. பொருளாதார நெருக்கடியால் அவதிப்படும் பெண்களுக்கு இதுபோன்ற சத்தான உணவுகள் கிடைப்பதில்லை. அவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்கின்றனர். இது வயிற்றில் வளரும் சிசுவையும் பெரிய அளவில் பாதிக்கிறது. எனவே இது போன்ற பெண்களுக்கு அரசு வழங்கும் இந்த நிதி ஒரு பெரும் ஆதரவாக அமைகிறது. தாய்மையின் போது ஏற்படும் மன மற்றும் உடல் ரீதியான அழுத்தங்களை குறைக்க அரசாங்கம் இந்த பெரிய முன்னெடுப்பை எடுத்துள்ளது.
77
PMMVY திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது?
இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைய விரும்புபவர்கள் கர்ப்பம் தரித்த உடனேயே அருகில் உள்ள அங்கன்வாடி மையம் அல்லது ஆரம்ப சுகாதார மையத்தில் பிரதம மந்திரி மாத்ரு வந்தனா (PMMVY) திட்டத்தின் கீழ் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். அவர்கள் கேட்கும் ஆவணங்கள் மற்றும் பிற சான்றுகளை முறையாக சமர்ப்பித்தால், பணம் நேரடியாக வங்கி கணக்கிற்கு மாற்றப்படும். இதுவரை இந்த திட்டம் குறித்து தெரியாதவர்கள் இனி இதை பயன்படுத்தி பயன்பெறுங்கள். கர்ப்பமாக இருக்கும் உங்கள் உறவினர்கள் அல்லது நண்பர்களுக்கும் இந்த செய்தியை பகிர்ந்து அவர்களும் பயன்பெறும் வண்ணம் செய்யுங்கள்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.