India US Tariff Talks
இந்தியா - அமெரிக்கா பேச்சுவார்த்தை:
அமெரிக்காவுடனான வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் நம்பிக்கையில், பாதாம் மற்றும் கிரான்பெர்ரி போன்ற அமெரிக்க பண்ணை பொருட்களின் இறக்குமதி மீதான வரிகளைக் குறைக்க இந்திய அரசாங்கம் முன்வந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வர்த்தக கட்டுப்பாடுகளை தளர்த்தவும், இரு தரப்பினருக்கும் சந்தை அணுகலை மேம்படுத்தவும் இரு நாடுகளுக்கும் இடையே நடந்துவரும் பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்காவின் துணை வர்த்தக பிரதிநிதி பிரெண்டன் லிஞ்ச் உடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் இந்த திட்டம் வந்துள்ளது.
புதிய வர்த்தக தடைகளைப் போக்குவதற்கும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கும் இந்தியா எடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த கட்டணக் குறைப்புக்கள் உள்ளன என்று கூறப்படுகிறது. இந்தப் பேச்சுவார்த்தைகள் இந்த வார இறுதிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
India US Tariff Talks
பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்:
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நன்றாக முன்னேறி வருகின்றன என்றும், இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் ஒரு ஒப்பந்தத்தை நோக்கி இரு தரப்பினரும் செயல்பட்டு வருவதாகவும் மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் வியாழக்கிழமை தெரிவித்தார்.
இந்தியா ஒரு சாதகமான ஒப்பந்தத்திற்கு முன்னுரிமை அளித்து வருவதாகவும், குறிப்பாக விவசாயத் துறையில் அமெரிக்கா கோரும் சலுகைகளை அளிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும், பால் பொருட்கள், அரிசி, கோதுமை மற்றும் மக்காச்சோளம் போன்ற சில பொருட்கள் விவாதத்திற்குரியதாக உள்ளன. இந்தப் பொருட்களின் மீதான வரிகளைக் குறைக்க இந்திய தயங்குகிறது.
India US Tariff Talks
விஸ்கி மீதான வரிக் குறைப்பு:
கடந்த மாதம், போர்பன் விஸ்கி மீதான வரிகளை இந்தியா 150% லிருந்து 100% ஆகக் குறைத்தது. தற்போது, கிரான்பெர்ரி, பாதாம் மற்றும் வால்நட்ஸ் போன்ற விவசாயப் பொருட்களுக்கான இறக்குமதி வரிகள் 30% முதல் 100% வரை உள்ளன, அதே நேரத்தில் பயறு வகைகளுக்கான வரிகள் சுமார் 10% ஆகும்.
இதற்கு ஈடாக, மாதுளை, திராட்சை போன்ற பழங்கள், அரிசி உள்ளிட்ட விவசாய ஏற்றுமதிகளுக்கு அமெரிக்கச் சந்தையில் அதிக வாய்ப்பு அளிக்க இந்தியா அழுத்தம் கொடுக்கிறது.
India US Tariff Talks
2025 இலையுதிர்காலத்திற்குள் இருதரப்புக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2024ஆம் ஆண்டில், இந்தியாவிற்கான அமெரிக்காவின் விவசாய மற்றும் தொடர்புடைய பொருட்களின் ஏற்றுமதி கிட்டத்தட்ட 2 பில்லியன் டாலர்களாக இருந்தது. இதில் 452 மில்லியன் டாலர் மதுபானங்களும் 1.3 பில்லியன் டாலர் பழங்கள் மற்றும் காய்கறிகளும் அடங்கும். இதற்கிடையில், இந்தியா அமெரிக்காவிற்கு விவசாயப் பொருட்களின் ஏற்றுமதி சுமார் 5.5 பில்லியன் டாலர்களாக இருந்தது.