
இந்தியர்களுக்கு தங்கம் என்றாலே அது ஒரு நம்பிக்கையும் பாதுகாப்பும் சேர்ந்த முதலீடு. திருமணம் முதல் அவசரநிலை வரை எப்போதும் நம்மில் பலரின் முதல் தேர்வு தங்கமே. கடந்த 2024–25ல் தங்கத்தின் விலை உலகளவில் பெரும் உயர்வைக் கண்டது. சர்வதேச சந்தையில் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு $4,187 என்ற அளவிலும், இந்தியாவில் 10 கிராம் தங்கம் ரூ.1.30 லட்சம் வரை சென்றுள்ளது. தற்பொழுது 10 கிராம் தங்கம் சுமார் ரூ.1.26 லட்சம் விற்பனையாகிறது. இத்தகைய பெரிய ஏற்றத்தைக் கண்ட பிறகு, அனைவரின் மனதிலும் எழும் கேள்வி—2026-ல் தங்கம் தொடர்ந்து உயருமா? உலகின் பெரிய நிதி நிறுவனங்கள் கணிப்புகளை வெளியிட்டுள்ளன.
Bank of America தங்களின் முன்னெச்சரிக்கை அறிவிப்பு 2026-ல் தங்கம் மேலும் 19% உயர்ந்து $5,000 வரை செல்லக்கூடும் என கணித்துள்ளது. உலகளாவிய அழுத்தங்கள், மத்திய அரசின் செலவுகள் அதிகரிப்பு, மத்திய வங்கிகளின் தங்கக் கொள்முதல் மற்றும் தனிநபர் முதலீட்டாளர்களின் பாதுகாப்பு சொத்துகளுக்கான விருப்பம் ஆகியவை விலை உயர்வுக்கான முக்கிய காரணங்கள் என அவர்கள் கூறுகின்றனர். தங்கம் நீண்ட கால முதலீட்டாளர்களின் போர்ட்ஃபோலியோவில் இன்னும் குறைவாக இருப்பதால் எதிர்கால கொள்முதல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் வங்கி நம்புகிறது.
Deutsche Bank-வும் தங்கத்தின் எதிர்காலம் குறித்து நம்பிக்கையுடன் உள்ளது. அவர்களின் கணிப்புப்படி தங்கம் உச்சபட்சமாக $4,950 வரை செல்லலாம். சராசரியாக $4,450 சுற்றி வர்த்தகம் செய்யலாம் என வங்கி கூறுகிறது. தங்க முதலீட்டு வரத்து நிலை உள்ளது, மத்திய வங்கிகள் மற்றும் ETF-களின் கொள்முதல் வலுவாக தொடர்கிறது என்பது அவர்களின் முக்கிய கருத்து. ஆனால் பங்குச் சந்தை திடீர் வீழ்ச்சி கண்டாலோ அல்லது பெடரல் ரிசர்வ் எதிர்பார்த்த அளவுக்கு வட்டி குறைக்கப்பட்டாலோ தங்கத்தின் விலைக்கு அழுத்தம் வரலாம் எச்சரிக்கையும் சேர்க்கப்பட்டுள்ளது. Goldman Sachs-ன் கணிப்பும் அதேபோல நல்லது. அடுத்த ஆண்டு தங்கம் $4,900 வரை செல்லக்கூடும் என அவர்கள் மதிப்பிடுகின்றனர்.
உலகளாவிய மத்திய வங்கிகள் பெரும் அளவில் தங்கத்தை வாங்கத் தொடங்கியுள்ளன, எதிர்பார்க்கப்படும் வட்டி விகிதக் குறைப்பு, பணவீக்கம் மற்றும் டாலரின் பலவீனம் ஆகியவையும் தங்குவதற்கான கோரிக்கையை அதிகரிக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர். இந்த வங்கிகளுடன் ஒப்பிடும் போது HSBC சற்று எச்சரிக்கை சுருக்கத்தில் உள்ளது. அவர்கள் 2026-ல் தங்கத்தின் விலை $3,600–$4,400 என்ற வரம்பில் இருக்கலாம் என கணித்துள்ளனர். உற்பத்தி அதிகரிக்கலாம், நேரடி தங்க கொள்முதல் சற்று குறையலாம், வங்கிகள் அதிக விலையில் கொள்முதல் செய்வதை விட்டு விலகலாம் என்பதனால் இந்த வரம்பு குறைவாக உள்ளது என்று விளக்கப்பட்டுள்ளது. இருப்பினும், உலகளவில் நிலவும் அரசியல்–பொருளாதார நிச்சயமற்ற தன்மை தங்கத்தின் விலையை உயரவோ நிலையாகவோ வைத்திருக்கும் என்றும் வங்கி நம்புகிறது.
இத்தனை கணிப்புகளையும் பார்த்தால், சர்வதேச விலை உயர்ந்தால் இந்தியாவிலும் அதன் தாக்கம் நேரடியாகப் பிரதிபலிக்கும். 2026-ல் இந்தியாவில் 10 கிராம் தங்கம் ரூ.1.45 லட்சம் முதல் ரூ.1.55 லட்சம் வரை செல்லக்கூடும் என பல நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர். தங்கம் எப்போதுமே பணவீக்கத்துக்கான பாதுகாப்பு சொந்தமாக இருந்ததால், நீண்ட கால முதலீட்டிற்கு இது தொடர்ந்து சிறந்த ஆபஷனாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
பொறுப்புத்துறப்பு: இந்த கணிப்புகள் அனைத்தும் பல வங்கிகளின் அறிக்கைகள் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை. தங்கத்தின் விலை சந்தை நிலை, உலக அரசியல், பொருளாதாரக் கொள்கைகள் ஆகியவற்றைப் பொறுத்து மாறக்கூடும். முதலீடு செய்ய முன், உங்கள் நிதி ஆலோசகரின் வழிகாட்டுதலைப் பெறுவது முக்கியம்.