
வேத ஜோதிடத்தின் படி ராகு கிரகம் ஒரு நிழல் கிரகமாக அறியப்படுகிறது. இந்த கிரகத்தின் இயல்பு மர்மமானது மற்றும் நிச்சயமற்றது. ஜோதிடத்தின் படி ராகு கிரகமானது மாயை, ஆசை மற்றும் உலகியல் இன்பங்களுடன் தொடர்புடையது. ராகு ஒரு நபருக்கு திடீர் செல்வம், புகழ் அல்லது சவால்களை கொண்டு வருவார். ராகு பாதகமாக இருக்கும் பொழுது மனக்குழப்பம், தவறான முடிவுகள், எதிர்பாராத தடைகளை உருவாக்கலாம்.
ராகு கிரகமானது ஜாதகத்தில் எதிர்மறையான அல்லது அபசகுணமான நிலையில் இருந்தால் அந்த நபருக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்காது என்றும், அவர் வாழ்நாள் முழுவதும் போராட்டங்களையே சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது. ராகு கிரகத்தால் பாதிக்கப்படுபவர்கள் மன அமைதியின்மை, கோபம், பயம், நிதி நெருக்கடி மற்றும் வாழ்க்கையில் நிலையற்ற தன்மையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இந்த நிலையில் ராகு கிரகத்தை அமைதிப்படுத்துவதற்கு சில பரிகாரங்கள் ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளன. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ராகு கிரகத்தின் எதிர்மறை தாக்கத்தை குறைக்க ராகு மந்திரத்தை தினமும் ஜெபிப்பது நன்மை தரும். “ஓம் ராகுவே நமஹ” என்கிற மந்திரத்தை தினமும் 108 முறை காலை அல்லது மாலை வேளையில் அமைதியான இடத்தில் அமர்ந்து ஜெபிக்க வேண்டும். ஒரு சிறிய தீபத்தை ஏற்றி வைத்து அதன் முன் அமர்ந்து ராகுவை மனதில் நினைத்து வணங்க வேண்டும். இது மன அமைதியை அளிக்கும் மற்றும் ராகுவின் எதிர்மறை ஆற்றலை குறைக்கும்.
ராகுவின் தாக்கத்தை குறைப்பதற்கு அதற்கு உரிய பொருட்களை தானம் செய்ய வேண்டியது பலன்களைத் தரும். கருப்பு எள், கருப்பு துணி, கருப்பு கடலை, தேங்காய், நீல நிறப் பொருட்களை தானம் செய்யலாம். இந்த பொருட்களை சனிக்கிழமை அல்லது அமாவாசை நாட்களில் ஏழைகளுக்கு கோவில்களில் தானமாக வழங்க வேண்டும். இதை செய்யும் பொழுது ராகுவின் ஆசியை வேண்டி மனதாரப் பிரார்த்தனை செய்யவும்.
ராகுவின் தாக்கத்தை குறைப்பதற்கு குறிப்பிடக் கோயில்களில் வழிபாடு செய்வது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் ராகு பகவானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. ஆந்திராவில் அமைந்துள்ள காளஹஸ்தி ராகு கேது பரிகாரத்திற்கு மிகவும் பிரபலமான கோயிலாகும். திருவண்ணாமலை நாகநாதர் கோவிலில் ராகு வழிபாடு செய்பவர்களுக்கு ராகு தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. இந்த கோயில்களில் ராகு காலத்தில் காலை 7:30 மணி முதல் 9:00 வரை அல்லது மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை பூஜை செய்வது பலன்களைத் தரும்.
ராகுவின் தாக்கத்தை குறைக்க உணவு முறைகளிலும் சில மாற்றங்களை செய்யலாம். சனிக்கிழமைகளில் உப்பு இல்லாமல் உணவு சாப்பிடுவது, கருப்பு எள் அல்லது கருப்பு கடலை சேர்த்த உணவுகளை உட்கொள்வது, மது, புகைப்பிடித்தல், போதைப் பழக்கங்களை தவிர்ப்பது ஆகியவற்றையும் மேற்கொள்ளலாம். இவை ராகுவின் எதிர்மறை தாக்கத்தை குறைக்க உதவும். ராகுவின் தாக்கத்தை குறைக்க நீலம் மற்றும் கருப்பு நிற ஆடைகளை அணியலாம். கோமேதகம் கல்லை மோதிரம் அல்லது பதக்கமாக அணியலாம். இதை அணிவதற்கு முன்னர் தகுதியான ஜோதிட ஆலோசனையைப் பெற வேண்டும்.
ராகு எப்போதும் எதிர்மறையாக மட்டும் செயல்படுவதில்லை. அவர் சரியான நிலையில் இருக்கும்பொழுது ஒரு நபருக்கு செல்வம், புகழ் மற்றும் உயர்ந்த அந்தஸ்தை வழங்குவார். எனவே ராகுவின் நன்மைகளை பெற மேற்கூறிய பரிகாரங்கள் முறையாக பின்பற்றுவது அவசியம். ராகுவின் எதிர்மறை தாக்கத்தை குறைப்பது ஒரு நபரின் வாழ்க்கையில் மன அமைதி, செல்வம் மற்றும் வெற்றியைக் கொண்டு வரும். மந்திர ஜெபம், தானம், கோயில் வழிபாடு, ஆரோக்கியமான வாழ்க்கை முறை மூலம் ராகுவின் எதிர்மறை தாக்கத்தை குறைக்கலாம். இந்த பரிகாரங்களை செய்வதற்கு முன்னர் தகுதியான ஜோதிட ஆலோசனை பெறுவது நல்லது. ஒவ்வொருவரின் தனிப்பட்ட ஜாதகமும் வேறுபட்டவை என்பதால் ஜோதிடரின் முறையான வழிகாட்டுதல்களுடன் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.