
கிரகங்களின் சேர்க்கை காரணமாக உருவாகும் யோகங்கள் ஒருவரின் வாழ்க்கையில் சுப அல்லது அசுப பலன்களை தரக்கூடும். அப்படிப்பட்ட ஒரு முக்கிய யோகம் தான் ஷடாஷ்டக யோகம். ஷடாஷ்டக என்கிற சொல் சமஸ்கிருதத்திலிருந்து பெறப்பட்டது. ஷட் என்றால் ஆறு, அஷ்டகம் என்றால் எட்டு. ஷடாஷ்டக யோகம் என்பது இரண்டு கிரகங்கள் ஒருவருக்கொருவர் ஆறு மற்றும் எட்டாம் வீட்டில் அமைந்திருக்கும் போது ஏற்படும் ஒரு கிரக அமைப்பாகும். ஆறாம் வீடானது சவால்கள், கடன்கள், நோய்கள், எதிரிகள் மற்றும் தடங்கல்களை குறிக்கிறது. எட்டாம் வீடு திடீர் மாற்றங்கள், மறைமுகமான விஷயங்கள், ஆயுள், விபத்து, தடைகளை குறிக்கிறது. இந்த இரு வீடுகளும் பொதுவாக அசுபமான வீடுகளாக கருதப்படுகின்றன.
எனவே இரண்டு கிரகங்கள் 6, 8 என்கிற நிலையில் அமரும்பொழுது அவற்றின் ஆற்றல்கள் ஒன்றோடு ஒன்று மோதி ஒருவித பதற்றம், சவால்கள் மற்றும் எதிர் விளைவுகளை உண்டாக்கலாம். இந்த யோகம் ஏற்படும் பொழுது சம்பந்தப்பட்ட கிரகங்களின் காராகத்துவங்கள் தொடர்பான துறைகளில் சவால்களும், தடங்கல்களும் ஏற்படலாம். குறிப்பாக ஒருவரின் ஜனன ஜாதகத்தில் இந்த யோகம் இருந்தால் உறவுகளில் மனக்கசப்பு, புரிதலின்மை, பிரிவினைகள் ஏற்படலாம். திருமண பொருத்தத்தின் போது இந்த ஷடாஷ்டக யோகம் கவனிக்கப்படுகிறது. இந்த யோகம் ஏற்படுவதால் தற்காலிகமாக நிதி ரீதியான இழப்புகள், கடன் சுமை, திடீர் செலவுகள் ஏற்படலாம். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளும், மன அமைதியின்மை, பதட்டம் மற்றும் மன உளைச்சல் போன்றவை கூட ஏற்படலாம்.
பொதுவாக ஷடாஷ்டக யோகம் அசுபமாக கருதப்பட்டாலும் சில விதிவிலக்குகளும் உண்டு. கிரகங்களின் நட்பு மற்றும் ஆதிக்கத்தை பொறுத்து இது மிருத்யு ஷடாஷ்டகம், ப்ரீதி ஷடாஷ்டகம் என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. மிருத்யு ஷடாஷ்டகம் மிகவும் அசுபமானதாக கருதப்படுகிறது. சம்பந்தப்பட்ட கிரகங்கள் மற்றும் ராசிகள் ஒன்றோடு ஒன்று பகைமை கொண்டிருக்கும் பொழுது இந்த அமைப்பு உருவாகிறது. இது கடுமையான சவால்கள், மோதல்கள், எதிர்மறை விளைவுகளை தரும். மிருத்யு என்ற சொல் மரணம் என்பதை குறிக்கும் என்றாலும், நேரடி மரணத்தை குறிப்பதில்லை. மாறாக இழப்புகள், வேதனைகள் அல்லது ஒரு நிலையின் முடிவு என்பதை குறிக்கலாம். ப்ரீதி ஷடாஷ்டகம் ஓரளவு சாதகமானது. சம்பந்தப்பட்ட கிரகங்கள் ராசிகள் ஒன்றுக்கொன்று நட்பு அல்லது சமமான உறவு கொண்டதாக இருந்தால் இந்த ப்ரீதி ஷடாஷ்டகம் உருவாகும். இது சவால்களை கொடுத்தாலும் அவற்றை சமாளிப்பதற்கான வழிகளையும், இறுதியில் நேர்மறை முடிவுகளையும் தரவல்லது.
ஷடாஷ்டக யோகம் கிரகங்களின் சஞ்சாரத்தால் உருவாகிறது அல்லது ஒருவரின் ஜனன ஜாதகத்திலேயே நிரந்தரமாக இருக்கலாம். குறிப்பிட்ட கிரகங்களின் சேர்க்கை பொறுத்து இந்த யோகத்தால் பாதிக்கப்படும் அல்லது பலன் பெறும் ராசிகள் மாறுபடலாம். எந்த கிரகங்கள் ஷடாஷ்டக யோகத்தை உருவாக்குகின்றன என்பதை பொறுத்து பலன்கள் மாறுபடும். செவ்வாய் மற்றும் சனி ஷடாஷ்டக யோகத்தை உருவாக்கினால் இது தீவிரமான சவால்களை ஏற்படுத்தலாம். ராகு மற்றும் கேதுவின் ஷடாஷ்டக யோகம் மனக்குழப்பம், முடிவெடுப்பதில் சிக்கல், எதிர்பாராத பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். ஷடாஷ்டக யோகத்தால் பலனடையும் ராசிகள் என்று குறிப்பிடப்படுவதில்லை. இந்த சவால்கள் ஒருவரை வலுப்படுத்தவும், பாடங்களை கற்றுக் கொள்ளவும், அதன் மூலம் வளர்ச்சி அடையவும் வழிவகுக்கும். இது ஒரு மறைமுகமான பலனாக கருதப்படுகிறது.
ராகு கிரகம் மே 18 அன்று கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைந்த நிலையில், செவ்வாய் கிரகம் ஜூலை 28 கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகிறது. இந்த இரண்டு கிரகங்களும் ஒன்றுக்கொன்று ஆறு மற்றும் எட்டாம் வீட்டில் அமையும் பொழுது ஷடாஷ்டக யோகம் உருவாகிறது. குறிப்பாக ராகு மற்றும் செவ்வாய் போன்ற உக்கிர கிரகங்கள் இந்த யோகத்தில் ஈடுபடும் பொழுது அதன் தாக்கம் தீவிரமாக இருக்கும். ராகு மற்றும் செவ்வாய் கிரகங்களால் உருவாகும் ஷடாஷ்டக யோகம் சில ராசிகளுக்கு சவால்களை கொடுக்க உள்ளது. இந்த ராசிகள் அதிக எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும் என்று ஜோதிடர்கள் பரிந்துரைக்கின்றனர். அந்த வகையில் மேஷ ராசியினர் மிக கவனத்துடன் செயல்பட வேண்டும். மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் ஆகும். செவ்வாய் மற்றும் ராகுவின் இந்த அமைப்பு மேஷ ராசிக்காரர்களுக்கு உடல்நலக் குறைபாடுகள், திடீர் செலவுகளை அதிகப்படுத்தலாம். கோபத்தை கட்டுப்படுத்தவும், தேவையற்ற வாக்குவாதங்களையும் தவிர்க்க வேண்டும்.
செவ்வாய் மற்றும் ராகு ஏற்படுத்தும் ஷடாஷ்டக யோகத்தால் அடுத்து பாதிப்புக்குள்ளாக இருப்பவர்கள் கடக ராசியினர். இவர்களுக்கு மன அழுத்தம், குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள், பண இழப்புகள் ஏற்படலாம். உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். வெளியூர் பயணங்களை தவிர்க்க வேண்டும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் அல்லது வேறு முடிவுகளை எடுப்பதில் மிக கவனத்துடன் செயல்பட வேண்டும். விருச்சிக ராசியின் அதிபதியும் செவ்வாய் என்பதால் விருச்சிக ராசிக்காரர்களுக்கும் இந்த யோகம் சில கடினமான சூழ்நிலைகளை உருவாக்கலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் பின்னடைவு, தேவையற்ற வீண் விரயங்கள், குடும்பத்தில் சச்சரவுகள் ஏற்படலாம். குறிப்பாக நிதி விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலும் மீனம், தனுசு, துலாம் ஆகிய ராசிகளுக்கும் ஷடாஷ்டக யோகம் கஷ்டத்தை கொடுக்கும் என்பதால் இவர்களும் கவனத்துடன் இருக்க வேண்டும்.
இந்த யோகம் பொதுவாக எதிர்மறையான பலன்களையே தரும் என்றாலும், அதன் தீவிரத் தன்மை ஒருவரின் ஜாதக நிலை மற்றும் தசா புத்திக்கு ஏற்ப மாறுபடலாம். இந்த யோகத்தின் எதிர்மறை விளைவுகளை குறைக்க சில பரிகாரங்கள் ஜோதிட ரீதியாக பரிந்துரைக்கப்படுகிறது. ராகு மற்றும் செவ்வாய் கிரகங்களுக்கு உரிய தெய்வங்களான முருகப்பெருமான், துர்க்கை அம்மனை வழிபடுவது, ராகு மற்றும் செவ்வாய் கிரகங்களுக்குரிய மந்திரங்களை உச்சரிப்பது, ராகு காலத்தில் அல்லது சனீஸ்வரர் ஆலயத்தில் எள் தீபம் ஏற்றி வணங்குவது, ராகு செவ்வாய்க் கூறிய தானியங்களான உளுந்து, துவரை தானம் செய்வது, சவாலான சூழ்நிலைகளில் பொறுமையுடன் நிதானத்துடன் செயல்படுவது ஆகியவை பரிகாரங்களாக கூறப்படுகிறது. இந்த ஷடாஷ்டக யோகம் என்பது தற்காலிகமான கிரக அமைப்பு ஆகும். இதன் தாக்கத்தை உணர்ந்து பரிகாரங்களை மேற்கொள்வதன் மூலமும், கவனத்துடன் செயல்படுவதன் மூலமும் விளைவுகளை குறைக்க முடியும்.
(மேற்கூறிய பலன்கள் இணையத்தில் கிடைக்கும் பொதுவான தகவல்களின் அடிப்படையிலும், ஜோதிடர்களின் கருத்துக்கள் அடிப்படையில் எடுக்கப்பட்டவை மட்டுமே. இதற்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. துல்லியமான பலன்களுக்கு அனுபவம் வாய்ந்த ஜோதிடரை அணுகுவது நல்லது)