
ஜோதிட சாஸ்திரத்தில் சுக்கிரன் ஒரு முக்கியமான கிரகம். அவர் திருமண வாழ்க்கை, வசதி, செல்வம், ஆடம்பரம், அன்பு, கலை போன்ற வாய்ப்புகளுக்கு காரணியாக கருதப்படுகிறார். ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரனின் நிலை வலுவாக இருந்தால் அவரது வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. சுக்கிரன் பொதுவாக ஒரு ராசியில் 24 நாட்கள் வரை இருப்பார். இவ்வாறு ஒரு ராசியில் இருக்கும் பொழுது அவர் சில சமயங்களில் ராஜ யோகங்களை உருவாக்கி பலன்களை தர வல்லவர். தற்போது சுக்கிரன் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். மிதுன ராசியில் ஏற்கனவே குருபகவான் சஞ்சரித்து வருகிறார். குருவும், சுக்கிரனும் இணைந்து கஜலட்சுமி ராஜயோகத்தை உருவாக்கியுள்ளனர்.
இந்த நிலையில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி சுக்கிரன் ஒரு சக்தி வாய்ந்த யோகத்தை உருவாக்கியிருக்கிறார். இது த்வி துவாதச யோகம் என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு அரிய நிகழ்வாக கருதப்படுகிறது. த்வி என்றால் இரண்டு, துவாதச என்றால் பன்னிரண்டு. ஒரு ஜாதகத்தில் ஒரு கிரகம் இருக்கும் இடத்திலிருந்து இரண்டாவது வீட்டில் ஒரு கிரகமும், 12-வது வீட்டில் மற்றொரு கிரகமும் இருந்தால் இந்த யோகம் உண்டாகிறது. இந்த யோகமானது சுப கிரகங்களின் தொடர்பில் உருவாகும் பொழுது நன்மைகளையும், அசுப கிரகங்களின் தொடர்பில் உருவாகும் பொழுது தீய பலன்களையும் கொடுக்கும். இந்த நிலையில் ஆகஸ்ட் 1-ம் தேதி சுக்கிரன் யுரேனஸ் கிரகத்துடன் சுக்கிரன் 30 டிகிரி கோணத்தில் தொடர்பு கொள்ளும் த்வி துவாதச யோகமானது உருவாகிறது.
யுரேனஸ் கிரகம் ஒரு ராசியில் ஏழு ஆண்டுகள் தங்கி இருக்கும் என்பதால் அது முழுமையான சுழற்சியை முடிக்க 84 ஆண்டுகள் ஆகும். தற்போது இந்த யோகம் 84 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகிறது. இந்த யோகத்தால் சில ராசிகளுக்கு சிறப்பான நன்மைகள் கிடைக்க இருப்பதாக ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர். அதில் முதன்மையானவர்கள் மிதுன ராசிக்காரர்கள். மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தைக் கொண்டு வரவுள்ளது. அவர்களுக்கு தொழில் வாழ்க்கை மேம்படும். அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கலாம். வேலையில்லாமல் தவித்து வருபவர்களுக்கு வேலை கிடைக்கும். திருமணமானவர்களுக்கு வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவுக்கு வந்து குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். வீடு, நிலம் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
சுக்கிரன் மற்றும் யுரேனஸால் உருவாகும் த்வி துவாதச ராஜ யோகத்தால் பலன் பெற இருப்பவர்கள் துலாம் ராசிக்காரர்கள். இவர்களுக்கு பல அதிர்ஷ்டமான காரியங்கள் கிடைக்க உள்ளது. எதிர்பாராத பண வரவுகள் கிடைக்கலாம். பல நாட்களாக முடங்கி கிடந்த சொத்து பிரச்சனைகள் நீங்கி சொத்துக்கள் கைக்கு வந்து சேரலாம். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணங்கள் நிதி ஆதாயங்களை தரும். நிதி நிலைமை அதிகரிப்பதால் பொருளாதார உயர்வு ஏற்படலாம். பணம் சார்ந்த விஷயங்களில் பெரிய முன்னேற்றம் இருக்கும். பணியிடத்தில் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். புதிய திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி உயர் பதவிகளை பெரும் வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் அமைதி திரும்பும். கணவன் மனைவி உறவு மேம்படும். புதிய வீடு, வாகனம் ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.
கும்ப ராசிக்காரர்களுக்கு த்வி துவாதச ராஜயோகம் வெற்றிகளை தரவல்லது. நீண்ட கால ஆசைகள் இந்த காலத்தில் நிறைவேறும். திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரலாம். நீதிமன்ற வழக்குகளில் வெற்றிகள் கிடைக்கும். கூட்டாக தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பொருளாதார நிலை மேம்படும். கலை, இசை மற்றும் படைப்புத் துறையில் இருப்பவர்களுக்கு பெரும் புகழ் உண்டாகும். சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கலாம். ஆரோக்கியம் மேம்படும். வீட்டில் சுப காரியங்கள் நிகழும். சுப செய்திகள் வந்து சேரும். குழந்தை இல்லாமல் தவிர்த்து வருபவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். திடீர் பணவரவு, சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கலாம். வியாபாரம் பெருகும். புதிய முதலீடுகள் உருவாகும். சேமிப்பு அதிகரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
(பொறுப்பு துறப்பு: மேற்குறிப்பிடப்பட்ட ஜோதிடப் பலன்கள் அனைத்தும் பொதுவானவை. ஒவ்வொருவரின் தனிப்பட்ட ஜாதகம், தசா புத்தி மற்றும் கிரக நிலைகள் வேறுபடும் என்பதால் இந்த பலன்கள் மாறுபடலாம். வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அனுபவமிக்க ஜோதிடரை அணுகி ஆலோசனை மேற்கொள்வது நல்லது)