
ஜோதிடத்தில் குரு பகவான் மங்களகரமான கிரகமாக அறியப்படுகிறார். அவர் ஒரு ராசியில் சுமார் 13 மாதங்கள் வரை இருந்து அதன் பின்னர் தனது ராசியை மாற்றுகிறார். ஆனால் இந்த வருடம் அக்டோபர் 2025-ல் அவர் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு அதிசாரமாக பயணித்து, நவம்பரில் வக்கிரமடைந்து மீண்டும் மிதுன ராசிக்கு திரும்ப இருக்கிறார். கடக ராசி குருபகவானின் உச்ச வீடு என்பதால் இந்த ராசியில் அவர் வக்ரம் அடையும் பொழுது சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை வாரி வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
குரு பகவான் உச்சம் பெறும் ராசியாக கடக ராசி உள்ளது. ‘உச்சம் பெறுதல்’ என்பது அந்த கிரகத்தின் முழு பலமும் வெளிப்படும் என்பது பொருளாகும். எனவே குரு பகவான் தனது உச்ச ராசியில் வக்ரம் அடைவதால் கடக ராசிக்காரர்களுக்கு இந்த காலம் சாதகமான காலமாக அமையும். இதன் காரணமாக தொழில் மற்றும் பொருளாதாரத்தில் பெரிய முன்னேற்றம், எதிர்பாராத அதிர்ஷ்டம், புதிய வாய்ப்புகள், இழந்த பொருட்களை மீண்டும் பெறுதல், திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறும். உங்கள் தன்னம்பிக்கை, ஆன்மீக பலம், அதிர்ஷ்டம் ஆகிய அனைத்தும் அதிகரிக்கும். உங்கள் முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.
கடக ராசியில் குரு பகவான் வக்ர நிலையை அடைவது மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில் மேஷ ராசியின் நான்காம் வீட்டில் குரு உச்சம் பெற்று வக்கிரமடைய இருக்கிறார். நான்காம் வீடு என்பது சொத்துக்கள், வீடு, நிலம், தாயார் தொடர்பான விஷயங்களை குறிக்கிறது. எனவே மேஷ ராசிக்காரர்களுக்கு புதிய வீடு வாங்குவது, புதிய நிலம், மனை வாங்குவது போன்ற யோகம் கிடைக்கும். பழைய வீட்டை புதுப்பிக்கும் முயற்சிகள் வெற்றி பெறலாம். தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். தாய் வழி உறவுகள் வலுப்படும். தாயார் வழியிலான பூர்வீக சொத்துக்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
மிதுன ராசியின் இரண்டாவது வீட்டில் குரு உச்சம் அடைய இருக்கிறார். ஜாதகத்தில் இரண்டாவது வீடானது செல்வம், உடமைகள், குடும்பம், பேச்சுத் திறன், பொருளாதாரம், நிதி நிலைமை, சம்பாதிக்கும் திறன் ஆகியவற்றை குறிக்கிறது. எனவே மிதுன ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் பணம் சார்ந்த விஷயங்களில் அதிர்ஷ்டத்தைப் பெறுவீர்கள். திடீர் சம்பள உயர்வு, புதிய வருமானத்திற்கான வழிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத வகையில் லாபம் கிடைக்கலாம். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். பிரிந்து சென்ற உறவுகள் மீண்டும் இணையலாம். வங்கி இருப்பு கணிசமாக உயரும்.
மீன ராசியின் ஐந்தாம் இடத்தில் குரு உச்சம் பெற்று வக்ரமடைய இருக்கிறார். ஒருவரின் ஜாதகத்தில் ஐந்தாவது வீடானது பூர்வ புண்ணிய ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. கல்வி, படைப்பாற்றல், காதல், அதிர்ஷ்டம், மன மகிழ்ச்சி, குலதெய்வத்தை இந்த வீடு குறிக்கிறது. எனவே மீன ராசிக்காரர்கள் குழந்தை, பாக்கியம், கல்வி, தொழில் முன்னேற்றம் ஆகியவற்றில் அதிர்ஷ்டத்தைப் பெறுவீர்கள். வேலைவாய்ப்புகள், பதவி உயர்வு, உயர் கல்வி வாய்ப்புகள் கைகூடும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும் குழந்தைகள் மூலம் சுப செய்திகள் கிடைக்கும். காதலில் இருப்பவர்களுக்கு சாதகமான நேரமாகும்.
குரு பகவான் அக்டோபர் 18, 2025 அன்று கடக ராசிக்கு சென்று நவம்பர் 11, 2025 அன்று வக்ரமடைந்து பிறகு மீண்டும் மிதுன ராசிக்கு திரும்ப இருக்கிறார். இதன் தாக்கம் சில மாதங்களுக்கு நீடிக்கும். இதன் காரணமாக மேற்குறிப்பிட்ட ராசிகள் நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.
ஜோதிடத்தின் படி வக்ரம் என்பது ஒரு கிரகம் பின்னோக்கி செல்வது போன்ற ஒரு தோற்றமாகும். வக்ர காலத்தில் குருவின் பலம் சற்று வித்தியாசமாக இருக்கும். இந்த நேரத்தில் கடந்த கால முடிவுகளை மறுபரிசீலனை செய்தல், நிலுவையில் உள்ள பணிகளை முடித்தல், ஆன்மீக வளர்ச்சியில் கவனம் செலுத்துதல் போன்றவை நல்லது.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)