ஃபிஃபா கால்பந்து உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆட்டம் ஆரம்பித்த 15வது நிமிடத்தில் ஈரான் கோல்கீப்பர் பைரன்வந்த் சக வீரருடன் பலமாக மோதியதில் மூக்கில் பலத்த அடிபட்டது. 5 நிமிடமாக அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டும், அவரால் தொடர்ந்து ஆடமுடியாததால் ஸ்ட்ரெட்சரில் தூக்கி செல்லப்பட்டார்.
ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் நேற்று கோலாகலமாக தொடங்கி நடந்துவருகிறது. நேற்று நடந்த முதல் போட்டியில் கத்தாரும் ஈகுவடாரும் மோதின. இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய ஈகுவடார் அணி 2-0 என்ற கோல்கணக்கில் கத்தாரை வீழ்த்தி வெற்றி பெற்றது.
உலக கோப்பையின் 2வது நாளான இன்று 2 போட்டிகள் நடக்கின்றன. இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கி நடந்துவரும் போட்டியில் க்ரூப் பியில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்தும் ஈரானும் ஆடிவருகின்றன. இரவு 9.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் க்ரூப் ஏ-யில் இடம்பெற்றுள்ள செனகலும் நெதர்லாந்தும் மோதுகின்றன.
undefined
6000 தொழிலாளர்களை காவு வாங்கிய ஃபிஃபா உலக கோப்பை.. கத்தாரில் நடந்த கொடுமை
இங்கிலாந்து - ஈரான் இடையேயான போட்டி தொடங்கிய 15வது நிமிடத்தில் ஈரான் கோல்கீப்பர் பைரன்வந்த் பந்தை தடுப்பதற்காக தாவிக்குதித்தபோது, எதிர்பாராதவிதமாக சக வீரர் ஒருவர் தலையில் மோதினார். கோல்கீப்பர் பைரன்வந்த்தின் மூக்கு மற்றொரு வீரரின் தலையில் மோதியதால் பைரன்வந்த்துக்கு மூக்கில் பலத்த அடிபட்டது. மைதானத்தில் சுருண்டு விழுந்த அவருக்கு 5 நிமிடம் சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனாலும் அவரால் தொடர்ந்து ஆடமுடியவில்லை. எழுந்து கூட நடக்கமுடியாத பைரன்வந்த் ஸ்ட்ரெட்சரில் தூக்கி செல்லப்பட்டார்.
இதையடுத்து அவருக்கு மாற்று கோல்கீப்பராக ஹுசைனி களத்திற்குள் வந்தார். அதன்பின்னர் ஆட்டத்தின் முதல் பாதியிலேயே இங்கிலாந்து அணி அடுத்தடுத்து 3 கோல்களை அடித்து 3-0 என முதல் பாதி முடிவில் முன்னிலை வகிக்கிறது. ஈரான் அணி ஒரு கோல் கூட அடிக்கவில்லை.