கத்தாரில் ஃபிஃபா கால்பந்து உலக கோப்பைக்கான கட்டுமான பணிகளை மேற்கொண்ட புலம்பெயர் தொழிலாளர்களில் 6000 பேர் உயிரிழந்திருக்கின்றனர். ஆனால் அந்த எண்ணிக்கையை குறைத்து காட்டியுள்ளது கத்தார் அரசு.
22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் நேற்று தொடங்கியது. கத்தாரில் உள்ள அல் பைட் ஸ்டேடியத்தில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கிய ஃபிஃபா உலக கோப்பையின் முதல் போட்டியில் கத்தாரை 2-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி ஈகுவடார் அணி வெற்றி பெற்றது.
ஃபிஃபா உலக கோப்பை தொடர் வெற்றிகரமாக தொடங்கி நடந்தாலும், ஒரு மாதம் நடக்கும் இந்த உலக கோப்பையை கத்தார் நடத்துவதில் பல சர்ச்சைகள் தொடர்ந்து நீடித்துவருகின்றன. 2010ம் ஆண்டு இந்த ஃபிஃபா உலக கோப்பையை நடத்துவதற்கான அனுமதியை பெற்றது கத்தார். ஃபிஃபா உலக கோப்பையை நடத்தும் முதல் மத்திய ஆசிய நாடு என்ற பெருமையையும் பெற்றது கத்தார்.
undefined
2010ம் ஆண்டு அனுமதி பெற்றதிலிருந்து, ஃபிஃபா உலக கோப்பையை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய தொடங்கிவிட்டது கத்தார். லுசைல் ஸ்டேடியம், அல் பேத் ஸ்டேடியம், ஸ்டேடியம் 974, கலீஃபா சர்வதேச அரங்கம், எஜுகேஷன் சிட்டி ஸ்டேடியம், அல் துமாமா ஸ்டேடியம், அல் ஜனுப் ஸ்டேடியம், அகமது பின் அலி ஸ்டேடியம் ஆகியவற்றில் 6 ஸ்டேடியங்களை புதிதாக கட்டமைத்துள்ளது. 2 ஸ்டேடியங்களை புதுப்பித்துள்ளது.
ஃபிஃபா உலக கோப்பையை நடத்துவதற்காக மொத்தமாக $220 பில்லியன் கத்தார் செலவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. $10 பில்லியன் ஸ்டேடியங்களை அமைப்பதற்கும், $4 பில்லியன் உலக கோப்பையை நடத்தும் உரிமத்தை பெறுவதற்கும் செலவு செய்துள்ளது. $210 பில்லியனை புதிய ஏர்போர்ட்டுகள், சாலைகள், ஹோட்டல்கள் கட்டுவதற்கும் புதுப்பிப்பதற்கும் செலவு செய்துள்ளது.
பெரும் பொருட்செலவில் ஃபிஃபா கால்பந்து உலக கோப்பைக்கான கட்டமைப்பு பணிகளை செய்தது கத்தார் அரசு. இந்த பணிகளை மேற்கொள்வதற்கு 30 ஆயிரம் புலம்பெயர் தொழிலாளர்களை பயன்படுத்தியுள்ளது கத்தார் அரசு. இந்தியா, நேபாளம், வங்கதேசம், ஃபிலிப்பைன்ஸ் நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் இந்த பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த தொழிலாளர்கள் அவர்களது திறனுக்கு மீறி வேலை வாங்கப்பட்டுள்ளனர். கத்தாரில் வெயில் மிக அதிகம். ஆனாலும் 12 மணி நேரத்துக்கும் மேலாக பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதனால் பணிச்சுமை அவர்களுக்கு அதிகரித்துள்ளது. போதுமான ஓய்வும் வழங்கப்படவில்லை. அதன்விளைவாக 12 ஆண்டுகளில் 6000 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு சரியான ஊதியம் கொடுக்கப்படாமலும் அலைக்கழிக்கப்பட்டுள்ளனர்.
6000 பேர் இறந்திருக்கலாம் என்றும், ஆனால் கத்தார் அரசு இந்த எண்ணிக்கையை குறைத்து கணக்கு காட்டியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கத்தாரில் ஃபிஃபா உலக கோப்பையை நடத்தக்கூடாது என்றும், கத்தாரில் நடத்த அனுமதி வழங்கியதே பெரிய தவறு என்றும் ஃபிஃபா முன்னாள் தலைவர் விமர்சித்திருந்தார்.
இந்த ஃபிஃபா உலக கோப்பையை நடத்தும் அனுமதியை கத்தார் பெற்றதிலிருந்தே கடும் சர்ச்சைகள் எழுந்துவந்த நிலையில், 6000 தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கின்றனர் என்ற தகவல் பெரும் சோகத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. ஒரு மாதம் நடக்கும் ஒரு விளையாட்டு தொடருக்கான ஏற்பாடுகளை செய்வதில் 6000 பேர் உயிரிழந்திருப்பது பெரும் சோகம்.