ஷ்ரதா வாக்கர் கொலையை போலவே மீண்டும்.. பெண்ணின் உடலை 6 துண்டுகளாக வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்த வீட்டு உரிமையாளர்

By Ramya sFirst Published May 25, 2023, 11:32 AM IST
Highlights

ஒரு நடுத்தர வயதுப் பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலையை குப்பைக் கிடங்கில் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் போலீசார் வீட்டு உரிமையாளரை கைது செய்தனர்

ஹைதராபாத்தில் மே 24, அன்று ஒரு கொடூரமான குற்றம் வெளிச்சத்திற்கு வந்தது. சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு நடுத்தர வயதுப் பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலையை குப்பைக் கிடங்கில் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் போலீசார் வீட்டு உரிமையாளரை கைது செய்தனர். 55 வயதான அனுராதா என அடையாளம் காணப்பட்ட பெண், தனது வீட்டு உரிமையாளரான 48 வயதான பி சந்திர மோகனால் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. அனுராதாவுக்கும் சந்திர மோகனுக்கும் ஏற்பட்ட பண தகராறில் இந்த கொலை நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சந்திர மோகன், மே 12 அன்று அனுராதாவை கத்தியால் குத்தி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் கல் வெட்டும் இயந்திரங்களைப் பயன்படுத்தி அவரது உடலை ஆறு பகுதிகளாக வெட்டி, அவற்றை ஒவ்வொன்றாக அப்புறப்படுத்த திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் உடல் பாகங்களை குளிர்சாதன பெட்டியில் வைத்து, பாதுகாத்ததாகவும், நாற்றம் வராமல் இருக்க ரூம் ஃப்ரெஷ்னரை பயன்படுத்தியாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : எவ்வளவு சொல்லியும் கேட்காமல் ஆண் நண்பருடன் கடலை.. லிவிங் டூ கெதர் காதலியை கதறவிட்ட காதலன்.. நடந்தது என்ன?

அனுராதாவின் தலையை ஒரு கருப்பு பாலித்தீன் கவரில் வைத்து, முசி ஆற்றுக்கு அருகிலுள்ள அப்சல் நகர் சமூகக் கூடத்தின் குறுக்கே உள்ள குப்பைக் கிடங்கில் வீசியதாகக் கூறப்படுகிறது, அங்கு துப்புரவு பணியாளர் ஒருவர் மே 17 காலை அதைக் கண்டுபிடித்தார்.

இந்த வழக்கில் நாட்டையே உலுக்கிய ஷ்ரத்தா வாக்கரின் கொலையை போன்றே சில திடுக்கிடும் ஒற்றுமைகள் உள்ளன, இதில் பாதிக்கப்பட்டவரின் உடல் உறுப்புகளைச் சேமிக்க குளிர்சாதனப் பெட்டியைப் பயன்படுத்தியது, அழுகும் வாசனையை மறைக்க வாசனை திரவியங்கள் மற்றும் தூபக் குச்சிகளைப் பயன்படுத்தியது. உடல் உறுப்புகள், மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர் சந்தேகம் வராமல் இருக்க உயிரிழந்த அனுராதாவின் தொலைபேசியிலிருந்து செய்திகளை அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

கிரேட்டர் ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷனின் துப்புரவுத் தொழிலாளி அனுராதாவின் தலையை மே 17 காலை மலக்பேட்டில் குப்பை கொட்டும் இடத்தில் கண்டெடுத்தார். நெரிசலான இடங்கள் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் அவரது புகைப்படங்களை விளம்பரப்படுத்துவதன் மூலம் போலீசார் தகவல்களைத் தேடிய போதும் அந்தப் பெண் பல நாட்களாக அடையாளம் காணப்படாமல் இருந்தார்.

சந்திர மோகன் அனுராதாவுடன் உறவு கொண்டிருந்தார் என்றும், மேலும் அவரது வீட்டின் கீழ் தளத்தில் ஒரு பகுதியில் அவருக்கு தங்கும் வசதி செய்து கொடுத்தார் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். அனுராதா ஒரு கந்து வட்டிக்காரர் என்றும், சந்திர மோகன் அவரிடமிருந்து 2018 முதல் சுமார் 7 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார் என்றும் போலீசார் கூறியுள்ளனர். கடனை திருப்பிச் செலுத்துமாறு அனுராதா அவருக்கு அழுத்தம் கொடுத்ததால், அவர் அனுராதாவை கொலை செய்ய திட்டம் தீட்டியதாகக் கூறப்படுகிறது.

கடந்த மே 12ம் தேதி இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், சந்திரமோகன், அனுராதாவை கத்தியால் தாக்கி, கொன்றதாகவும், இதில் அனுராதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சந்திர மோகன் அனுராதாவின் உடலை அப்புறப்படுத்த இரண்டு சிறிய கல் வெட்டு இயந்திரங்களை வாங்கியதாகவும், உடலை 6 பகுதிகளாக வெட்டினார் என்று போலீசார் தெரிவித்தனர்.

மே 15ம் தேதி சந்திரமோகன் தலையை ஆட்டோவில் குப்பை கொட்டும் இடத்திற்கு கொண்டு வந்து அப்புறப்படுத்தி விட்டு சென்றதாகவும், அழுகும் வாசனையை மறைக்க அவர், டெட்டால், வாசனை திரவியங்கள், ஊதுபத்தி குச்சிகள், கற்பூரம் போன்றவற்றை பயன்படுத்தியதாகவும் போலீசார் தெரிவித்தனர். 

பின்னர் சந்திர மோகன் அனுராதாவின் செல்போனை எடுத்து, அவருக்கு தெரிந்தவர்களுக்கு அவர் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த மெசேஜ் அனுப்பினார் என்றும், மீதமுள்ள உடல் உறுப்புகளை அப்புறப்படுத்துவதற்குள் சந்திர மோகன் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 302 (கொலை) மற்றும் 201 (குற்றத்திற்கான சான்றுகள் காணாமல் போனது) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : டெலிகிராம் செயலியில் நடந்து வரும் நூதன மோசடி.. யாரும் ஏமாற வேண்டாம்.. தமிழக டிஜிபி வார்னிங்

click me!