விடுதலை புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்கும் வகையில் செயல்பட்டதாகவும், போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தல் தொடர்பாக திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த இலங்கையை சேர்ந்த 9 பேரை என்ஐஏ போலீசார் கைது செய்துள்ளனர்.
திருச்சி முகாமில் வெளிநாட்டு கைதிகள்
தமிழகத்தில் போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குளில் சிக்கும் வெளிநாட்டவர்களை திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வழக்கில் இருந்து ஜாமீனில் வந்தாலும், விடுதலையானாலும் அவர்களுடைய நாட்டிற்கு அனுப்பும் வரை சிறப்பு முகாமிலேயே தங்க வைக்கப்படுவார்கள். தற்போது சிறப்பு முகாமில் இலங்கை, வங்காளதேசம், நைஜீரியா, ருவாண்டா, பல்கேரியா, தெற்கு சூடான், பாகிஸ்தான், இங்கிலாந்து, சீனா உள்பட பல நாடுகளை சேர்ந்த 152 பேர் உள்ளனர்.
என்ஐஏ போலீசார் சோதனை
இந்த முகாமில் என்ஐஏ அதிகாரிகள் அவ்வப்போது சோதனை மேற்கொள்வார்கள். கடந்த ஜூலை மாதம் கேரளாவை சேர்ந்த என்ஐஏ அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் 100-க்கும் மேற்பட்ட செல்போன்கள், மடிக்கணினி, தங்க நகைகள், பென்டிரைவ், சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டன. அப்போது சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த இலங்கையை சேர்ந்த குணசேகரன் உள்பட 12 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது 300 கிலோ ஹெராயின் போதைப்பொருள், 5 ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், 1,000 துப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தனர். அப்போது விடுதலை புலிகள் தொடர்பான ஆவணங்களையும் பறிமுதல் செய்திருந்தனர். மேலும் சர்வதேச அளவில் பொதைப்பொருள் கும்பலோடு தொடர்பு இருந்தது தெரியவந்தது.
விடுதலை புலிகள் மறு உருவாக்கம்
இந்தநிலையில் மீண்டும் நேற்று என்ஐஏ அதிகாரிகள் திருச்சி சிறப்பு முகாமில் சோதனை நடத்தினர். அப்போது இலங்கையை சேர்ந்த குணசேகரன் உள்ளிட்ட 9 பேரையும் கைது செய்து என்ஐஏ போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் இந்த கைது சம்பவம் தொடர்பாக என்ஐஏ போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், குணசேகரன் (எ) குணா, புஷ்பராஜ், ஆகியோர் பாகிஸ்தானை மையமாக வைத்து போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை இந்தியா மற்றும் இலங்கைக்கு கடத்தியதாக தெரிவித்துள்ளனர். மேலும் விடுதலை புலிகள் அமைப்பை மீண்டும் உருவாக்க திட்டமிட்டு வந்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக என்ஐஏ கூறியுள்ளது.
இதையும் படியுங்கள்