புது வீடு… புது பிஸினஸ்… புது கெட்அப் … லண்டனில் சொகுசு வாழ்க்கை வாழும் நீரவ் மோடி !!

By Selvanayagam PFirst Published Mar 9, 2019, 12:47 PM IST
Highlights

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13  ஆயிரம்  கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்தாமல்  மோசடி செய்து தப்பி ஓடிய வைரவியாபாரி நீரவ் மோடி, லண்டனில் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் புதிய வீட்டில், புதிய தொழிலில், புதிய கெட் அப்பில் வாழ்ந்து வருவதாக தி டெலிகிராப் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

குஜராத்தைச் சேர்ந்த  வைர வியாபாரியும், தொழிலதிபருமான நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13  ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு அதை திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டார்.

இதையடுத்து நீரவ் மோடியை சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவினர் தற்போது தேடி வருகின்றனர். மேலும் நீரவ்மோடி மீது நீதிமன்றங்களிலும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

இந்த நிலையில், லண்டனில் உள்ள வெஸ்ட் என்ட் பகுதியில் 80 லட்சம் பவுண்ட் மதிப்புள்ள ஒரு 3 படுக்கை அறை கொண்ட சொகுசு குடியிருப்பில் நீரவ் மோடி  தற்போது வாழ்ந்து வருவதாக லண்டனில் வெளியாகும் தி டெலிகிராப் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

மாதம் ஒன்றுக்கு  16 லட்சம் ரூபாய்  வாடகையில்  3 படுக்கை அறை கொண்ட அடுக்குமாடி வீட்டில் நீரவ்மோடி  வசித்து வருகிறார். தற்போது லண்டனில் புதிதாக வைர வியாபாரத்தையும் செய்து வரும் நீரவ் மோடி, தனது கெட்-அப்பை மாற்றி மீசையுடன் வலம் வருகிறார் என்றும் டெலிகிராப் நாளேடு  தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் உள்ள கிஹிம் கடற்கரைப் பகுதியில் நீரவ் மோடிக்கு சொந்தமான 30 ஆயிரம் சதுர அடி பரப்புள்ள சொகுசு வீடு நேற்று இடிக்கப்பட்ட நிலையில், நீரவ் மோடி குறித்த இந்த தகவல் வெளியாகியுள்ளது

இந்தியாவில் நீரவ் மோடியின் அனைத்து வங்கிக்கணக்குகளும் முடக்கப்பட்டுவிட்டன, தொழில்கள் முடக்கப்பட்டு, கடைகளும் சீல் வைக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் லண்டனில் புதிய தோற்றத்தில், புதிதாக வைர வியாபாரத்தையும், கடையையும் நீரவ் மோடி தொடங்கியுள்ளார் என்று டெலிகிராப் தெரிவித்துள்ளது.
டெலிகிராப் நாளேடு வெளியிட்ட வீடியோவில், " முகத்தில் மீசையுடன், ரூ.9 லட்சம் மதிப்புள்ள ஆஸ்ட்ரிச் கோட்சூட் அணிந்து நீரவ் மோடி காணப்படுகிறார். அப்போது அவரிடம், இங்கிலாந்து அரசிடம் அடைக்கலம் கேட்பீர்களா என்று நிருபர்கள் கேட்டபோது,  மன்னித்துக்கொள்ளுங்கள், எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்க இயலாது " எனத் கூறிவிட்டு சென்றுவிடுகிறார்.

நீரவ் மோடிக்கு இங்கிலாந்து அரசு சார்பில் வேலைவாய்ப்பு மற்றும் ஓய்வூதிய எண், அதாவது தேசிய காப்பீடு எண் வழங்கப்பட்டுள்ளது. 
இதன் மூலம் இங்கிலாந்தில் சட்டப்பூர்வமாக நிரவ் மோடி பணியாற்ற முடியும், இங்கிலாந்தில் வங்கிக்கணக்குகளை தொடங்கிப் பயன்படுத்த முடியும் என்றும் டெலிகிராப் தெரிவிக்கிறது.

click me!