கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே ஆசை பட பாணியில் 7 வயது மகனை பாலித்தீன் கவரால் முகத்தில் கட்டி மூச்சு திணறடித்து கொன்ற வழக்கறிஞர் மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் முகிலன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் முரளிதன் (வயது 40). எம்.இ., பிஎல் பட்டதாரியான இவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவருக்கும், தக்கலை மணலி பகுதியைச் சேர்ந்த பயோ டெக்னாலஜி முடித்த 36 வயதான சைலஜா என்பவருக்கும் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இந்த தம்பதியருக்கு 7-வயதில் ஜீவா என்ற மகன் இருந்தார். பெங்களூருவில் வசித்து வந்த தம்பதியர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன் தக்கலையில் ஒரு வாடகை வீட்டில் குடிபெயர்ந்த நிலையில் மணலி பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் சொந்தமாக புதிய வீடு கட்டி குடியேறியுள்ளனர். முரளிதரனும் ஐடி நிறுவனத்தின் பணியை விட்டு நாகர்கோவில் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்துள்ளார்.
undefined
மக்களுக்கு கெடுதல் இல்லாமல் ஆட்சி; நான் செய்து காட்டுவேன் - சசிகலா உறுதி
இந்த நிலையில் தினமும் மாலை தனது மகள் சைலஜா வீட்டிற்கு பால் கொண்டு செல்லும் அவரது தந்தை கோபால், வழக்கம் போல் நேற்று மாலை வீட்டிற்கு சென்ற போது வீடு பூட்டிய நிலையில் இருந்துள்ளது. வெகு நேரமாகியும் கதவு திறக்காத நிலையில் இருந்ததால் சந்தேகமடைந்த அவர் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது மருமகன் முரளிதரன் வீட்டின் ஹாலில் மின் விசிறியில் தூக்கிட்ட நிலையிலும், மகள் சைலஜா மற்றொரு அறையில் தூக்கிட்ட நிலையிலும் பேரன் ஜீவா முகம் பாலித்தீன் கவர்கள் முகற்றில் கட்டப்பட்ட நிலையில் கட்டிலிலும் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் தக்கலை காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
தகவல் அறிந்து டிஎஸ்பி உதயசூரியன் தலைமையிலான காவல் துறையினர் அங்கு சென்று மூவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முரளிதரன், சைலஜா தம்பதிக்கு திருமணமாகி ஆறு வருடங்களாக குழந்தை இல்லாத நிலையில் கடந்த 7 வருடங்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
முதலில் ஆரோக்கியமாக இருந்த குழந்தை ஜீவா பின்னர் மெல்ல மெல்ல ஆட்டிசம் குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நோய்க்கு மருத்துவம் பார்த்து வந்த நிலையில் கொரோனா காவகட்டத்தில் வேலை இழந்த முரளிதரன் மனைவியின் சொந்த ஊரான தக்கலைக்கு குடிபெயர்ந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் சொந்தமாக புதிய வீடு கட்டி குடியேறிய முரளிதரன் சைலஜா தம்பதியருக்கு வேறு குழந்தைகள் இல்லாத நிலையில் ஒரே ஆசை மகனும் ஆட்டிசம் குறைபாடு நோயால் பாதிப்படைந்ததாலும், பணம் இருந்தும் மகனின் நோயை தீர்க்க முடியாத அவர்கள் மன வேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான் மனமுடைந்த தம்பதியர் முதலில் தனது மகன் ஜீவாவிற்கு அவரது நோய்க்காக மருத்துவர்களால் வழங்கப்பட்ட மருந்தை அதிக அளவில் கொடுத்து மயக்கமடைய செய்து அவரது முகத்தை பாலித்தீன் கவரால் கட்டி கட்டிலில் போட்டு விட்டு முரளிதரன் வீட்டில் ஹாலில் மின் விசிறியிலும், சைலஜா அறையில் மின் விசிறியிலும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் காவல் துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.
மகன் தீராத ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் மனமுடைந்த வழக்கறிஞர் ஒருவர் மகனையும் கொன்று மனையுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.