அத்திகடவு - அவிநாசி திட்டத்திற்கு ஆப்பு வைத்த கொள்ளையர்கள்.. 1.5 டன் இரும்பினை கடத்திய அதிர்ச்சி சம்பவம் !

By Raghupati RFirst Published May 27, 2022, 4:05 PM IST
Highlights

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் அத்திகடவு - அவிநாசி திட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. 

அத்திகடவு அவிநாசி திட்டம்

அத்திகடவு அவிநாசி திட்டத்தின் மூலம் வறண்டபூமியாக ஒட்டக முதுகு பகுதி என‌அழைக்கப்படும் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர், அவநாசி,சேவூர்,குட்டிகள் மற்றும் கோவை மாவட்டம் காரமடை,அன்னூர் உள்ளிட்ட பகுதிகள் வளமாகும் எனும் எதிர்பார்ப்பில் உள்ளனர் இப்பகுதி விவசாயிகள். தமிழகத்தில் மேற்கு மாவட்டங்களான கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில், ஒரு பகுதி நெல், மஞ்சள், கரும்பு, வாழை என வளம் கொழிக்கும் பூமியாக இருந்த போதிலும், மற்றொரு பகுதி வானம் பார்த்த வறட்சியான பகுதியாக உள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி காவிரியில் கலக்கும் பவானி ஆற்றின் உபரி நீரை,வறண்ட பகுதியான அவிநாசிக்கு கொண்டு வருவதற்காக அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை இந்த பகுதி மக்களிடம் கடந்த 60 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதற்கு அடித்தளமிட்டது ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்த பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் என்பவராவார். இவர் நீர் திட்டங்களை நிறைவேற்ற நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்றைய பிரிட்டீஷ் ஆட்சி காலத்தில்,1850 முதல் 1890 வரையான காலத்தில்,பவானி ஆற்று நீரை மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள அத்திக்கடவு பகுதியில் இருந்து கால்வாய் வெட்டி,வறட்சி பகுதியான அவிநாசி, பெருந்துறை வரையும், அவிநாசியில் இருந்து பல்லடம்,குடிமங்கலம் வரை மற்றொரு கால்வாயும் வெட்ட சர்வே பணிகளை மேற்கொண்டார்.இவரே அத்திக்கடவு அவிநாசி திட்ட முன்னோடியாக இன்றும் மக்களால் நினைவு கூறப்படுகிறார். அவிநாசி மற்றும் அருகாமை பகுதிகளைச் சார்ந்த மக்களின் தொடர் போராட்டத்தை அடுத்து செயல்வடிவம் பெற்ற இந்த திட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 

அத்துடன்,பவானி ஆறு கடைசியாக காவிரியில் கலக்கும் காலிங்கராயன் பாளையத்தில் இருந்து உபரி நீரை எடுத்து குழாய் மூலம் பம்பிங் செய்து குளம் குட்டைகளுக்கு கொண்டு வரும் வகையில் 1756 கோடி ரூபாயில் திட்டம் செயலாக்கம் பெற்றது. காலிங்கராயன் அணைக்கட்டிற்கு கீழ் பவானி ஆற்றில் இருந்து ஆண்டிற்கு 70 நாட்களுக்கு தினமும் 250 கன அடி வீதம் ஆண்டிற்கு ஒன்றரை டி.எம்.சி தண்ணீரை 105 கி.மீ தொலைவிற்கு அன்னூர் வரை பெருந்துறை , சேவூர், குன்னத்தூர்,அவினாசி வழியாக எடுத்து செல்லப்படும். இத்தண்ணீர் 1045 குளம் குட்டைகளில் நிரப்பப்பட உள்ளது. 

இதற்காக 6 இடங்களில் ராட்சத நீரேற்று நிலையங்களும்,953 கிமீ தொலைவு குழாய்களும் பதிக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் அத்திகடவு - அவிநாசி திட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அதன் ஒருபகுதியாக அன்னூரை அடுத்துள்ள குன்னத்தூராம்பாளையம் பகுதியில் 6 வது நீரேற்று நிலையம் அமைக்கும் பணி ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பகுதியை சேர்ந்த சிபியரசன்(29) என்பவரது பொறுப்பில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில அத்திகடவு - அவிநாசி திட்டப்பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 1. 5 டன் இரும்பு பொருட்கள் திருடு போயுள்ளதாக அன்னூர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இரும்பு பொருட்களை திருடிய திருடர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று அன்னூர் போலீசார் தென்னம்பாளையம் சாலையில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த ஐவரை சந்தேகத்தின் பேரில் காவல் நிலையம் அழைத்துச்சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

திருட்டு சம்பவம்

போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் அவர்கள் தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த வெங்கட கிருஷ்ணன்(25), பிரசாந்த்(24), நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த கெளதம்(24), சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த நவீன்(25), பூபதி(25) என்பதும், குன்னத்தூராம்பாளையம் அவினாசி-அத்திக்கடவு திட்ட இரும்பு பொருட்களை திருடியதும் தெரியவந்தது.

மேலும், இதில் பிரசாந்த் என்பவர் அத்திகடவு - அவிநாசி திட்டத்தின் குன்னத்தூராம்பாளையம் நீரேற்று நிலையத்தின் காவலாளியாக பணிபுரிந்ததும், மற்றவர் அவரது நண்பர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. அவர்களிடம் இருந்து திருடப்பட்ட 1. 5 டன் இரும்பு பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தியதாக லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய உள்ளது.

இதையும் படிங்க : "ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதித்துள்ளார்" பிரதமர் மோடி - ஸ்டாலின் விழாவில் புது சர்ச்சை.!

இதையும் படிங்க : நான் சமாதி ஆகிவிட்டேன்.. எந்த வரங்கள் வேண்டுமானாலும் கேளுங்கள்.! தொடரும் நித்யானந்தா அட்ராசிட்டிஸ் !!

click me!