Ashwin Kumar: அந்த 40 கதைல என்னுடையதும் ஒன்னு.. அஸ்வினின் உண்மை முகம் இதுதான்- வெளுத்து வாங்கிய இளம் இயக்குனர்

By Ganesh PerumalFirst Published Dec 8, 2021, 3:15 PM IST
Highlights

அஸ்வின் கதை கேட்டு ரிஜக்ட் செய்த 40 இயக்குனர்களில் ஒருவர், தனது ஆதங்கத்தை சமீபத்திய பேட்டி மூலம் வெளிப்படுத்தி உள்ளார். 

நடிகர் அஸ்வின் குமார் கடந்த 2015-ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ரெட்டைவால் குருவி’ தொடர் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்த தொடர் 99 எபிசோடுகள் மட்டுமே ஒளிபரப்பானது. போதிய வரவேற்பு இல்லாததால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதையடுத்து நினைக்க தெரிந்த மனமே என்கிற தொடரில் நாயகனாக நடித்தார் அஸ்வின். அந்த தொடரும் 90 எபிசோடுகளில் மூடிவிழா கண்டது.

சின்னத்திரை செட் ஆகாததால், பெரியதிரையில் நடிக்க முயற்சி செய்த அஸ்வினுக்கு மணிரத்னத்தின் ஓ காதல் கண்மனி மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான ஆதித்ய வர்மா போன்ற படங்களில் சிறிய வேடம் மட்டுமே கிடைத்தது. இதையடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி அவரை மிகவும் பிரபலமாக்கியது. இந்நிகழ்ச்சி மூலம் அவருக்கு ரசிகர் வட்டமும் பெரிதானது.

இந்நிகழ்ச்சிக்கு பின் பட வாய்ப்பும் கிடைத்தது. அதன்படி ‘என்ன சொல்ல போகிறாய்’ என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார் அஸ்வின். இதுவரை சமூக வலைதளங்களில் அன்பையும், ஆதரவையும் பெற்று வந்த அஸ்வின், கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த என்ன சொல்ல போகிறாய் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பேச்சால் கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளார். 

கதை கேட்கும் போது கதை பிடிக்கவில்லை என்றால் தூங்கி விடுவேன், அவ்வாறு இதுவரை 40 கதைகளை கேட்டு தூங்கி இருக்கிறேன் என அவர் பேசியதைக் கேட்டு கோலிவுட்டே கொந்தளித்தது. ஒரு படம் கூட ரிலீஸ் ஆகவில்லை அதற்குள் இப்படி ஒரு ஆணவப் பேச்சு தேவையா என்றெல்லாம் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இவ்வளவு எதிர்ப்பு வரும் என்பதை சற்றும் எதிர்பார்க்காத அஸ்வின், பதற்றத்தில் அவ்வாறு பேசிவிட்டதாக மழுப்பலான விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

இந்நிலையில், அஸ்வின் கதை கேட்டு ரிஜக்ட் செய்த 40 இயக்குனர்களில் ஒருவர், தனது ஆதங்கத்தை சமீபத்திய பேட்டி மூலம் வெளிப்படுத்தி உள்ளார். பெயர் சொல்ல விரும்பாத அந்த இளம் இயக்குனர், அஸ்வினிடம் கதை சொன்ன நிகழ்வு குறித்து கூறியதாவது: “குக்வித் கோமாளி நிகழ்ச்சி ஆரம்பித்த சமயத்தில் அஸ்வினை பார்த்ததும், எனது கதைக்கு பொருத்தமாக இருப்பார் என தோன்றியது. அவர் எனது நண்பன் இயக்கிய குறும்படத்தில் நடித்திருந்ததால், அவன் மூலம் தொடர்பு கொண்டேன். 

கதை கேட்கவே 5 மாதங்கள் இழுத்தடித்துக் கொண்டே இருந்தார் அஸ்வின். அதற்குள் குக் வித் கோமாளி ஷூட்டிங்கே முடிந்துவிட்டது. அதுவரை என்னிடம் நேரடியாக பேசி வந்தவர், குக் வித் கோமாளி முடிந்ததும் பி.ஆர்.ஓ மூலம் பேசும்படி கூறினார். நீண்ட நாட்களுக்கு பிறகு ஒருவழியா அவரிடம் கதை சொல்ல வாய்ப்பு கிடைத்தது. கதை கேட்பதற்கு முன்பு உங்கள் கதையை படமாக்க உங்களிடம் தயாரிப்பாளர் இருக்காரா என கேட்டார். நான் இல்லை என்றேன். 

இருப்பினும் ஒருவர் முதலீடு செய்ய தயாராக இருப்பதாக கூறினேன். உடனே நான் பெரிய பேனரில் தான் படம் பண்ணுவேன். புது தயாரிப்பாளர்களுக்கு படம் பண்ண மாட்டேன் என சொல்லிவிட்டார். பின்னர் அவரை சமாதானப்படுத்தி கதையை கூறினேன். கதையை சொல்ல 2 மணிநேரம் கேட்டேன். ஆனால் அவரோ 45 நிமிடம் தான் கேட்பேன் என சொன்னார். 

நான் கதையை சொல்லும் போது வேண்டா வெறுப்புடன் தான் கேட்டார். கேட்டு பிடிக்கவில்லை என சொல்லிவிட்டார். பல இயக்குனர்கள் பாராட்டிய என் கதையை ஒரு புதுமுக நடிகர் பிடிக்கவில்லை என சொன்னதும் நான் ஷாக் ஆயிட்டேன். என்னுடைய ஆறு வருஷ உழைப்பு போச்சேனு ரொம்ப பீல் பண்ணேன். இவருக்கே பிடிக்கலேனா பெரிய நடிகர்கள் என்ன சொல்வார்கள் என்றெல்லாம் யோசிச்சேன்..

விஜய் எப்படி கதை கேட்பாருன்னும் எனக்கு தெரியும். விஜய் சேதுபதி கிட்ட டீ கடைல உக்காந்து கதை சொல்லிருக்கேன். உதயநிதி ஸ்டாலினும் உதவி இயக்குனர்களை அவ்வளவு மரியாதையாக நடத்துவார் என்பதை பார்த்திருக்கிறேன். இவர்களையெல்லாம் பார்த்த எனக்கு அஸ்வின் செய்தது ஷாக்காக இருந்தது. அவருக்கு படிப்படியாக உயர வேண்டும் என்ற எண்ணமே இல்லை. எடுத்தவுடன் சினிமாவில் நட்சத்திரமாகி விட வேண்டும் என நினைக்கிறார். அது நல்லதல்ல” என கூறினார்.

click me!