உயிரோடு இருப்பதே குற்ற உணர்ச்சியாக இருக்கிறது... விபத்தில் தோழியை இழந்த யாஷிகா ஆனந்த் உருக்கம்...!

By Kanimozhi PannerselvamFirst Published Aug 3, 2021, 12:28 PM IST
Highlights

கார் விபத்தில் தோழி வள்ளி செட்டி பவணியை இழந்தது குறித்து யாஷிகா ஆனந்த் உருக்கமாக பதிவிட்டுள்ளது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 

தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகையான யாஷிகா ஆனந்த் சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜூலை 25ம் தேதி அதிகாலை ஒரு மணி அளவில் நண்பர்களுடன் பார்ட்டி ஒன்றிற்கு சென்றுவிட்டு புதுச்சேரியில் இருந்து சென்னை திரும்பிய, யாஷிகா ஆனந்த் டாடா ஹேரியர் காரை படுவேகமாக ஓட்டியுள்ளார். அப்போது கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சூளேறிக்காடு என்ற பகுதி  அருகே கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதிய கார் விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் யாஷிகா ஆனந்தின் தோழியான ஐதராபாத்தைச் சேர்ந்த பெண் இன்ஜினியர் வள்ளி செட்டி பவணி விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின் இருக்கையில் இருந்ததால் யாஷிகாவின் நண்பர்கள் அமீர், சையது ஆகியோர் சிறு காயங்களுடன் தப்பியதாக தெரிகிறது. விபத்தில் உடல் முழுவதும் படுகாயம் அடைந்த யாஷிகா ஆனந்த் தற்போது சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். யாஷிகா மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைப் பிறகு கண்விழித்த யாஷிகா ஆனந்த் தோழியை பற்றி கேட்டதாகவும், ஆனால் மருத்துவர்களின் அறிவுரையின் பெயரில் அவர் உயிரிழந்த செய்தியைக் கூறாமல், வென்டிலேட்டர் சிகிச்சையில் இருப்பதாக கூறியதாகவும் யாஷிகாவின் தாயார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் யாஷிகா ஆனந்த் தோழி மரணம் குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். 

அதில், நான் இப்போது என்ன மனநிலையில் இருக்கிறேன் என்பதை என்னால் உண்மையில் வெளிப்படுத்த முடியாது. நான் மட்டும் உயிரோடு இருப்பது என்றென்றும் குற்ற உணர்ச்சியாக இருக்கப் போகிறது. கோர விபத்திலிருந்து என்னை காப்பாற்றியதற்காக கடவுளுக்கு நன்றி சொல்வதா, இல்லை என்னுடைய உயிர்த்தோழியை என்னிடமிருந்து எடுத்துக் கொண்டதற்காக கடவுளை குற்றம் சொல்வதா என்று எனக்கு தெரியவில்லை. ஒவ்வொரு நொடியும் நான் உன்னை மிஸ் செய்கிறேன் பவணி.  என்னை நீ மன்னிக்கவே மாட்டாய் என்பது தெரியும். உன் குடும்பத்தினருக்கு இப்படியொரு மோசமான நிலையை கொடுத்ததற்காக என்னை மன்னித்துவிடு.

 

உன் ஆத்மா சாந்தி அடையும் என்று நம்புகிறேன். நீ என்னிடம் திரும்பி வரவேண்டும் என்று விரும்புகிறேன். என்றாவது ஒரு நாள் உன் குடும்பத்தினர் என்னை மன்னிப்பார்கள் என்று நம்புகிறேன். நம்முடைய நினைவுகளை நான் என்றென்றும் பாதுகாப்பேன். நான் இனி எனது பிறந்தநாளை கொண்டாடப்போவதில்லை. தயவு செய்து என்னுடைய ரசிகர்களும் இனி கொண்டாட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். பவணியின் குடும்பத்தினருக்காக பிரார்த்தனை செய்யுங்கள். கடவுள் அவர்களுக்கு கூடுதல் மன வலிமையை கொடுக்கட்டும். இது என்னுடைய வாழ்வில் மிகப்பெரிய இழப்பு. என்றாவது ஒரு நாள் என்னை மன்னியுங்கள். ஐ மிஸ் யூ என கண்ணீர் மல்க உருக்கமாக பதிவிட்டுள்ளார். 

click me!