நாளை முதல் 50% பார்வையாளர்களுடன் தியேட்டர்களை திறக்க அனுமதி.. அதிரடி உத்தரவு...!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 30, 2021, 7:54 PM IST
Highlights

மேற்கு வங்க மாநிலத்தில் 50 சதவிகித பார்வையாளர்களுடன் திரை அரங்குகள் நாளை முதல் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலே இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முதன்மையாக இருப்பதால் அதிக பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. முதல் அலையில் இருந்து மீண்டு இரண்டாவது அலை ஆரம்பித்ததால் தியேட்டர்களின் நிலை மேலும் மோசமானது. அதே சமயத்தில் மத்திய, மாநில அரசுகளின் முயற்சியை அடுத்து தற்போது இந்தியாவில் கொரோனா 2வது அலையை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 


இதையடுத்து பல்வேறு மாநிலங்களிலும் ஓராண்டுக்கும் மேலாக பொருளாதார சிக்கல்களை சந்தித்து வரும் தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் வாழ்வில் விளக்கேற்றும் விதமாக தியேட்டர்கள் திறக்கப்பட்டு வருகின்றன. இன்று முதல் தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களில் அரசு விதிமுறையை பின்பற்றி திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையில், ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்துள்ளனர். இது திரையரங்க உரிமையாளர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.


அதேபோல் பிற மாநிலங்களிலும் தியேட்டர்களை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில் நாளை முதல் மேற்குவங்கத்தில் உள்ள தியேட்டர்களை திறக்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அனுமதி அளித்துள்ளார். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தியேட்டர்களை திறக்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதே சமயத்தில் கேரளா மற்றும் தமிழகத்தில் கொரோனா தொற்றின் வேகம் மீண்டும் தலைதூக்குவதால் தியேட்டர்களை திறக்க விதிக்கப்பட்ட தடை நீடித்து வருகிறது. 
 

click me!