
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில், இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். 70க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கள்ளச்சாராய விற்பனைக்காக பலமுறை சிறைச் சென்ற குற்றவாளி ஒருவர் சட்டவிரோதமாக விற்பனை செய்த இந்த விஷச்சாராயத்தை குடித்தே இந்த சோகம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் கள்ளச்சாராய விற்பனைக் கும்பல் மீதான காவல்துறை நடவடிக்கை எடுக்காதது குறித்து கேள்வி எழுந்துள்ளது.
காவல்துறையில் உள்ள சில கருப்பு ஆடுகளின் துணையுடன் தான் இதுபோன்ற சட்டவிரோத கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வருகின்றது என கூறப்பட்ட நிலையில், கள்ளக்குறிச்சியை சேர்ந்த அதிகாரிகள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது ஒருபுறம் இருக்க, இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கும் நோக்கத்தில்... பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் அடுத்தடுத்து தங்களின் கருத்தை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது நடிகர் விஷால் தரப்பில் இருந்து அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது, "கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போவது பேரதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் விஷச் சாராயத்திற்கு பலி ஆகும் நிகழ்வும் போதை பொருட்கள் அதிகரித்து வருவதும் தொடர் கதையாகவே உள்ளது.
சம்பந்தப்பட்ட சில அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு முதற்கட்ட நடவடிக்கை எடுத்து இருந்தாலும் இந்த துயரமான நிகழ்விற்கு காரணமான ஒருவர் கூட விடுபடாத அளவிற்கு நீதியின் முன் நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
"கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்."
என்ற வள்ளுவனின் வாக்குக்கு இணங்க தமிழ்நாடு அரசு விஷச் சாரயத்தை ஒழிக்கவும், சமீப நாட்களாக தமிழகத்தில் புழங்கும் போதை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதிலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்த மதுபான கடைகளை படிப்படியாக குறைத்திட செயல் திட்டம் வகுத்திட வேண்டும் என்ற கோரிக்கையை இந்த அறிக்கை வாயிலாக தமிழக மக்களின் ஒருவனாக தமிழ்நாடு அரசிற்கு சமர்பிக்கிறேன். உங்களில் ஒருவன் விஷால் என தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.