'விடுதலை' இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு துவங்கி விட்டதாக, நடிகர் சூரி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷமாக பார்க்கப்படும் இயக்குனர்களில் ஒருவர் வெற்றி மாறன். தொடர்ந்து தமிழ் சினிமாவில் அற்புதமான நாவல்கள், மற்றும் சிறுகதைகளை தேடி தேடி இயக்கி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். வெற்றிமாறன், கடைசியாக நடிகர் சூரியை வைத்து இயக்கி வெளியான 'விடுதலை' படத்தின் முதல் பாகம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.
எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய சிறுகதையான 'துணைவன்' என்கிற கதையை தழுவி எடுக்கப்பட்டிருந்த விடுதலை படத்தின் முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றியால், ஒட்டுமொத்த பட குழுவும் உச்சகட்ட மகிழ்ச்சியில் துள்ளி குதித்த நிலையில், அதே உற்சாகத்தோடு தற்போது இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பிலும் பரபரப்பாக இறங்கி உள்ளனர். 'விடுதலை' படத்தில் ஹீரோவாக நடிகர் சூரி நடித்திருந்தார். பல முன்னணி நடிகர்களின் படங்களில், காமெடி வேடத்தில் நடித்து கிச்சுகிச்சு மூடிய சூரி, இப்படத்தின் மூலம் அனைவரையுமே பிரமிக்க வைத்தார்.
குமரேசன் என்கிற கான்ஸ்டேபிள் வேடத்தில் நடித்திருந்த சூரி, இந்த கதாபாத்திரத்திற்காக எவ்வளவு உழைப்பை போட்டிருந்தார் என்பது அவருடைய தோற்றத்தையும், நடிப்பையம் பார்க்கும் போதே நன்கு உணர முடிந்தது. சூரியை தொடர்ந்து இந்த படம் வெற்றியடைய மிகப்பெரிய காரணமாக இருந்தவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. ஒரு போராளியாக நடித்து இப்படத்தை தூக்கி நிறுத்தினார். சூரிக்கு ஜோடியாக ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ நடித்திருந்தார். இந்த திரைப்படம் திரையரங்கில் 50 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருந்த போதே ஜீ 5 ஓடிடி தளத்திலும் வெளியாகி பிரம்மாண்ட வரவேற்பை பெற்றது.
தற்போது நடிகர் சூரி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குமரேசன் ரெடி என்கிற கேப்ஷனுடன்... மீண்டும் போலீஸ் கெட்டப்புக்கு மாறி , 'விடுதலை' படத்தின் இரண்டாம் பாகம் நடந்து வருவதாகவும் கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருவதோடு மட்டுமின்றி, ரசிகர்கள் பலரும்... அவருக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து, இரண்டாம் பாகத்தை பார்க்க காத்திருப்பதாக கூறி வருகின்றனர்.