பிரபல நடிகர் சரத்பாபு திடீர் என ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் நடிகர் சரத்பாபு. இவர் தெலுங்கில் 1973 ஆம் ஆண்டு வெளியான 'ராம ராஜ்ஜியம்' என்கிற திரைப்படத்தின் மூலம் நடிகராக தன்னுடைய பயணத்தை துவங்கினார். பின்னர் தமிழில் கடந்த 1977 ஆம் ஆண்டு வெளியான 'பட்டின பிரவேசம்' என்கிற படத்தின் மூலம் சரத்பாபுவை இயக்குனர் கே பாலச்சந்தர் அறிமுகப்படுத்தினார்.
முதல் படத்திலேயே தன்னுடைய திறமையான நடிப்பால் தமிழக ரசிகர்கள் கவனத்தை ஈர்த்த சரத்பாபு, பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் கவனம் செலுத்தினார். ஹீரோவாக இவர் சில தமிழ் படங்களில் நடித்திருந்தாலும், அந்த படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. அதே நேரம் இரண்டாவது ஹீரோவாக இவர் பல படங்களில் நடித்துள்ளார்.
குறிப்பாக ரஜினிகாந்துடன் முத்து, அண்ணாமலை, போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளார். இந்த படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. மேலும் விஜயகாந்த், கமல்ஹாசன், போன்ற முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். இதுவரை சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சரத் பாபுவுக்கு, தற்போது 71 வயதாகிறது.
வயது முதிர்வு காரணமாக திரையுலகில் இருந்து விலகி, ஹைதராபாத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் முழு ஓய்வில் இருக்கும் இவருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டதன் காரணமாக, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.